கன்னடம் Vs மராத்தி: மாணவன் மீது தாக்குதல்!

இந்தியா

பெலகாவிக்கு உரிமை கோரும் விவகாரத்தில் கர்நாடக கொடியுடன் நடனமாடிய மாணவன் மீது தாக்குதல் நடந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள பெலகாவி மாவட்டத்தை மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது‌.

இந்த விவகாரத்தில் அவ்வப்போது இரு மாநிலத்தின் அரசு பேருந்துகளை ஒருவருக்கு ஒருவர் தங்களது மாநில எல்லைக்குள் சிறை பிடித்து தங்களது மாநில கொடியை அதில் ஏற்றுவதும், பேருந்துகள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் உச்சகட்டமாக தற்பொழுது பெலகாவி நகரில் உள்ள தனியார் பியூ கல்லூரியில் நேற்று(நவம்பர் 30) இரவு நடந்த ஆண்டு விழாவில் கன்னட கொடியை கையில் ஏந்தி ஆடிக்கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் மீது வேறு சில மாணவர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மொழிவாரியான மோதல் இரு மாநில எல்லையில் தற்பொழுது மாணவர்கள் இடையே மோதலாக வெடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடந்ததை அடுத்து கன்னட அமைப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். உடனடியாக தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் பெலகாவி துணை காவல்துறை கண்காணிப்பாளர் ரவீந்திரா திலக் வாடி காவல்துறையினருடன் சென்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

மாணவன் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ள நிலையில் கன்னட அமைப்புகள் மாநிலம் முழுவதும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதனால் பெலகாவியில் பதற்றமான சூழல் இருந்து வருகிறது.

கலை.ரா

ஆன்லைன் மோசடி: 6 நாளில் ரூ.32 லட்சத்தை இழந்த இளைஞர்!

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *