தலைநகர் டெல்லியில் இன்று (பிப்ரவரி 17) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். strong earthquake tremors delhi
இன்று அதிகாலை 5.35 மணியளவில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, நொய்டா, காசியாபாத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள மக்கள் அலறியடித்துக்கொண்டு தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.0 என்ற அளவில் பதிவாகியுள்ளது. தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்பு கல்வியியல் கல்லூரிக்கு அருகில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அமித், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “அதிகாலை 5.35 மணியளவில், முழு கட்டிடமும் குலுங்கியது. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு வெளியே ஓடினர். இவ்வளவு வலுவான அதிர்வுகளை நான் இதற்கு முன்பு உணர்ந்ததில்லை. நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
புது டெல்லி ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணி ஒருவர் கூறும்போது, “நான் காத்திருப்பு அறையில் இருந்தேன். அப்போது திடீரென்று பாலம் இடிந்துவிழுவது போன்ற ஒரு சத்தம் கேட்டது. உடனடியாக பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். strong earthquake tremors delhi