நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்புப் படையினர், பணியாளர்கள் ஆகியோரை உறுதி செய்யுமாறு தேர்தல் பார்வையாளர்களுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவுறுத்தினார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் செய்து வருகின்றன.
தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் ராஜினாமா செய்திருக்கும் நிலையில், மக்களவைத் தேர்தல் தள்ளி போகலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இன்று (மார்ச் 11) பார்வையாளர்கள் நியமிக்கப்படுவதற்கான விளக்கக் கூட்டத்தைக் கூட்டிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த இந்த விளக்கக் கூட்டத்தில் இந்தியக் குடிமைப்பணி, இந்தியக் காவல் பணி அதிகாரிகள், இந்திய வருவாய் சேவை மற்றும் சில மத்திய சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள் என 2150க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரிகள் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய தலைமை ஆணையர் ராஜூவ் குமார், “எதிர்வரும் தேர்தல்களில் 900 பொது பார்வையாளர்கள், 450 காவல் பார்வையாளர்கள் மற்றும் 800 செலவின பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தேர்தல் பார்வையாளர்களான நீங்கள் சுதந்திரமான, நியாயமான, மிரட்டல் மற்றும் தூண்டுதல் இல்லாத தேர்தல்களுக்குச் சமமான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்புப் படையினர், பணியாளர்கள் ஆகியோரை உறுதி செய்ய வேண்டும்.
இந்த மத்திய பார்வையாளர்கள் கடுமையாகவும், அதே நேரத்தில் கண்ணியமாகவும் நடந்துகொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தித் தேர்தலில் பங்கேற்பை மேம்படுத்தவும் உதவ வேண்டும்” என அறிவுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Power Cut சிறப்பு திட்டத்தை கையில் எடுக்கும் மின்வாரியம்!
சிறார் ஆபாச பட வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!