ஹைதராபாத்தில் பிப்ரவரி மாதம் இரண்டு வயது குழந்தையை மூன்று தெரு நாய்கள் கடித்த சிசிடிவி காட்சிகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதனால் பலரும் தெரு நாய்கள் மீதான தங்கள் ஆதங்கத்தை இணையத்தில் கொட்டி தீர்த்தனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த வருடம் டெல்லியில் 5 மற்றும் 7 வயது நிரம்பிய இரண்டு குழந்தைகளும், சூரத்தில் 2 வயது குழந்தையும், ஹைதராபாத்தில் 4 வயது குழந்தையும் என மொத்தம் 4 குழந்தைகள் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்துள்ளனர்.
நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயால் ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரேபிஸ் நோய் காரணமாக 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் உயிரிழக்கின்றனர்.
தெரு நாய்களை பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.கே.பிஜூ தொடர்ந்த பொதுநல மனுவில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது மனிதாபிமான செயல் என்றும் அதே நேரத்தில் பொதுமக்களை தெரு நாய்கள் அச்சுறுத்தாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.

மும்பை, அலகாபாத், உத்தரகாண்ட், கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பொதுநல மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் தெரு நாய்கள் விவகாரம் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.
2019-ஆம் ஆண்டு லைவ் ஸ்டாக் எடுத்த கருத்துக்கணிப்பின்படி இந்தியா முழுவதும் 1.5 கோடி தெரு நாய்கள் உள்ளது. அதிகப்படியாக உத்தரபிரதேசத்தில் 20 லட்சமும், ஒடிசாவில் 17 லட்சமும், மகாராஷ்டிராவில் 12.7 லட்சம் தெரு நாய்கள் உள்ளன.
இந்தியா முழுவதும் 2019 முதல் 2022-ஆம் ஆண்டு வரை 1,55,529,012 பேரை தெரு நாய்கள் கடித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 27.5 லட்சம் பேரையும், தமிழ்நாட்டில் 21.4 லட்சம், மகாராஷ்டிராவில் 16.7 லட்சம் பேரை தெரு நாய்கள் கடித்துள்ளது.
தேசிய சுகாதார மையத்தின் அறிவிப்பின்படி 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரை தெரு நாய்கள் கடித்ததால் மேற்கு வங்கத்தில் 194 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 86 பேரும், ஆந்திராவில் 41 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் 2020-ஆம் ஆண்டு இந்தியாவில் நாய் கடித்ததன் காரணமாக 268 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
ரேபிஸ் நோயை தடுப்பதற்காக சுகாதாரத்துறை சார்பில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாவில் 2022-ஆம் ஆண்டு அங்குள்ள 70 சதவிகித தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் 92 சதவிகிதம் அளவிற்கு ரேபிஸ் நோய் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் சோழிங்கநல்லூர் மற்றும் மீனம்பாக்கத்தில் பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூரில் 125 தெரு நாய்களுக்கும் மீனம்பாக்கத்தில் 108 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 1913 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெரு நாய்கள் கடித்தால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு விடுமோ என்று பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தெரு நாய் கடித்த இடத்தில் சோப்பு கொண்டு 15 நிமிடங்கள் கழுவ வேண்டும். மருத்துவனைக்கு சென்று டோஸ் ரேபீஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த தடுப்பூசியை மருத்துவர் அறிவுறுத்தலின்படி 3 முறை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.
தெரு நாய் தொல்லை இந்தியா முழுவதும் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளதால் அரசு இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
செல்வம்