உத்தரப் பிரதேசத்தில் இரு பயணிகள் நமாஸ் செய்வதற்காக அரசு பேருந்தை நிறுத்திய நடத்துநர் தற்கொலை செய்துகொண்டார்.
உத்தரப் பிரதேசம் அரசு போக்குவரத்து கழகத்தில் மோகித் யாதவ் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 7 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவருக்கு சம்பளம் மாதம் ரூ.17 ஆயிரம் மட்டுமே. இதை வைத்துதான் அவரது குடும்ப உறுப்பினர்களும் வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 3ஆம் தேதி அரசுப் பேருந்தில் பயணம் செய்த இரண்டு முஸ்லிம் மதத்தினர், தொழுகை நடத்துவதற்காக பரேய்லி – டெல்லி தேசிய நெடுஞ்சாலையோரம் இரண்டு நிமிடம் நிறுத்தச் செய்துள்ளார்.
இந்த தகவல் அரசு போக்குவரத்து கழகத்துக்கு தெரியவந்ததும் மோகித் யாதவும், அந்த பேருந்தின் ஓட்டுநரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மூன்று மாதமாக சம்பளம் கிடைக்காததால் குடும்பத்தை நடத்தவே மோகித் யாதவ் சிரமப்பட்டு வந்துள்ளார்.
“தனது செல்போனுக்கு கூட ரீசார்ஜ் செய்யமுடியவில்லை. அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்லவும் பணம் இல்லை, அப்படியே சென்றாலும் தனக்கு மீண்டும் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை” என்று தனது நண்பரிடம் கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்படி கஷ்டத்தில் இருந்த மோகித் யாதவ் கடந்த 27ஆம் தேதி ஞாயிறு இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மெயின்பூரி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் மோகித்தின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்
மோகித்தின் மனைவி ரிங்கி கூறுகையில், “மீண்டும் பணி வழங்கக் கேட்டு எனது கணவர் தொடர்ந்து பரேலி போக்குவரத்து கழக மேலாளாருக்கு போன் செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவர் எனது கணவரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
எங்கள் பக்கம் நியாயத்தை கேட்காமல் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
தனது மனிதாபிமானத்துக்கான கூலியை கொடுத்துவிட்டார்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஜூன் 3ஆம் தேதி பேருந்தை நிறுத்துவதற்கு முன் பயணிகளிடம் ஒரு கருத்தை மோகித் யாதவ் சொல்லியிருக்கிறார்.
“நாங்களும் இந்துக்கள் தான்… இங்கு பிரச்சினை இந்துவா முஸ்லீமா என்று இல்லை. இரண்டு நிமிடம் பேருந்தை நிறுத்துவதன் மூலம் எதுவும் நடக்காது” என்று கூறியிருக்கிறார்.
மோகித் பேசுவதை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைத் தொடர்ந்து மோகித் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை தாக்கல்!