இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் நேற்று (மே 22) புதன்கிழமை லாபத்துடன் முடிவடைந்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 267.75 புள்ளிகள் உயர்ந்து 74,221.06 புள்ளியிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 68.75 புள்ளிகள் உயர்ந்து 22,597.80 புள்ளியில் முடிவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் சிப்லா, டாடா கன்ஸ்யூமர், ஹிந்துஸ்தான் யூனிலீவர்,கோல் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிக லாபம் ஈட்டியது.
புதன்கிழமை கவனம் செலுத்தப்பட்ட பங்குகளில் PNC இன்ஃப்ராடெக் புதிய சாதனையை எட்டி 13% க்கும் அதிகமாக லாபத்தைக் கொடுத்தது, BEML கிட்டத்தட்ட 9% உயர்ந்தது மற்றும் IRB இன்ஃப்ராஸ்ட்ரக்சர் 6% லாபத்தை அளித்தது.
முறையே ஸ்ரீராம் ஃபைனான்ஸ்,அப்பல்லோ மருத்துவமனைகள்,ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎஃப்சி லைஃப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகியது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியதில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) சுமார் 37,700 கோடி மதிப்புள்ள இந்தியப் பங்குகளை விற்றுள்ளனர், இது கடந்த 21 வர்த்தக அமர்வுகளில் சராசரியாக தினசரி 1,800 கோடி அளவுக்கு வெளியேறி வருகிறது. இந்தியாவில் தற்போது நிலவி வரும் நிலையற்ற பொருளாதார தன்மையைத் தவிர்க்கும் போக்கு காரணமாக; வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை திரும்ப பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்&எம் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் காப்பீடு விநியோகத்திற்கான உரிமத்தைப் பெற்றதன் காரணமாக நேற்றை புதன்கிழமை இதன் பங்குகள் 0.95% உயர்ந்தது..
Nykaa நிறுவனம் நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டிய 2.4 கோடி ரூபாயை ஒப்பிடுகையில் 187% உயர்ந்து 6.9 கோடியாக அதிகரித்ததாக தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக உள்ள இண்டிகோ நான்காவது காலாண்டு முடிவுகளை இன்று வியாழக்கிழமை அறிவிக்க உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடு ஆரோக்கியமாக உள்ளதால் நல்ல வருவாயை ஈட்டும் என்று பங்குச்சந்தை தரகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மூன்றாவது காலாண்டில் இண்டிகோவின் லாபம் 111% அதிகரித்து 2,998 கோடியை ஈட்டியதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இண்டிகோவின் Interglobe Aviation Ltd பங்குகள் நேற்று புதன்கிழமை பங்குச்சந்தையில் 1% அளவுக்கு உயர்ந்தது.
சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மார்ச் 2024 இல் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக 2,654.5 கோடியை ஈட்டியதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் 1,984.47 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக திலிப் ஷங்வி நியமிக்கப்பட்டதாகவும் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிர்வாக வாரியத்தின் தலைவராக இவர் இன்று முதல் செயல்படுவார் என்று தெரிந்துள்ளது இந்நிறுவனத்தின் அறிக்கை.
BHEL நிறுவனம் 1,150 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் பெற்றதாக அறிவித்த நிலையில் நேற்று இதன் பங்கு 2.61% அதிகரித்தது.
NSEல் BEML, அலிகான்,HBSL (9.95%), இன்ஃப்ரா (9.74%) பங்குகள் புதிய 52 வார உயர்வை எட்டியது.
Paytmன் தாய் நிறுவனமான One 97 Communications Ltd, மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் 550.5 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பை சந்தித்ததாக அறிவித்தது. அதேநேரத்தில் முந்தைய நிதியாண்டில் ஏற்பட்ட 1776.5 கோடியை கணக்கிடுகையில் இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த நிகர இழப்பு குறைந்து 1,422.40 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்றைக்கு என்ன நிலவரம்?
இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று ( மே 23) வியாழக்கிழமை வர்த்தகத்தில் சமதளமாகத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம், உலகளாவிய சந்தைகளின் தாக்கம் இந்திய பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் என்று பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் Grasim, Sun Pharma, Power Grid Corp., Nykaa, Garden Reach Shipbuilders பங்குகள் கவனிக்க வேண்டியவை என்று பங்குச் சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
இன்று வியாழக்கிழமை ITC, InterGlobe Aviation, Honasa Consumer, Bayer Cropscience, Cello World, CESC, Concord Biotech, Finolex Cables, Page Industries, Tata Investment Corporation மற்றும் Zaggle Prepaid Ocean Services உள்ளிட்ட கீழ்க்கண்ட 181 நிறுவனங்கள் நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கின்றன.
–மணியன் கலியமூர்த்தி
பயமுறுத்தும் பேய்த்தனத்தைக் காட்டிய ‘டிமான்டி காலனி’!
காதல் …மனம் திறந்த VJ அர்ச்சனா
Good information