இஸ்ரோ நிறுவனம் EOS-08 செயற்கைக்கோளை இன்று (ஆகஸ்ட் 16) காலை SSLV-D3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
SSLV-D3 மூலம் பூமியைக் கண்காணிப்பதற்கு உதவும் 176 கிலோ எடையுள்ள EOS-08 செயற்கைக்கோளை இன்று காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. சரியாக 17 நிமிடங்கள் கழித்து SSLV-D3 ராக்கெட் EOS-08 செயற்கைக்கோளை 475 கிலோ மீட்டர் ஆரமுள்ள, 37.4° சாய்வு கொண்ட வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்த EOS-08 செயற்கைக்கோள் 1 வருடத்திற்கு வேலை செய்யும்.
இது SSLV ராக்கெட்டின் மூன்றாவது மற்றும் கடைசிக்கட்ட சோதனை ஓட்டம் ஆகும். SSLV ராக்கெட் 3 நிலைகொண்டதாகும். மூன்று நிலையிலுமே திட எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். இதற்கடுத்து கடைசியாக திரவ எரிபொருளை இந்த ராக்கெட் பயன்படுத்தும். 2 மீட்டர் விட்டமும் 34 மீட்டர் உயரமும், 120 டன் எடையுள்ள இந்த SSLV ராக்கெட்டால், அதிகபட்சமாக 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடியும்.
இந்த SSLV ராக்கெட்டை தயார் செய்வதற்கான செலவு மிகவும் குறைவு, பல செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணுக்குக் கொண்டு செல்லும் திறன் கொண்டது,தேவைக்கேற்ப விண்ணில் ஏவ முடியும் மற்றும் ஏவுவதற்குத் தேவையான உள்கட்டமைப்பும் மிகவும் குறைவு என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
SSLV-D3-யின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், இதைப் போல இன்னும் பல ராக்கெட்டுகளைத் தயாரிக்க, SSLV ஏவூர்தி தயாரிக்கத் தேவையான தொழில்நுட்பங்களின் விபரங்களை இந்தியாவில் உள்ள தொழில்துறைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்துவருவதாக இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
SSLV செயற்கைக்கோளுடன் ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம் தயாரித்த SR-0 DEMOSAT செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கலைஞர் நினைவு நாணயம் : மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி!
திரும்பவும் வேகம் எடுத்த தங்கம் விலை…எவ்வளவு கூடியது?
ஆளுநரின் தேநீர் விருந்து… அரசியல் தலைவர்கள் சந்திப்பு – சுவாரஸ்ய புகைப்படங்கள்!