எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் நாளை (பிப்ரவரி 10) காலை விண்ணில் ஏவப்படவுள்ளதால் அதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது.
இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராகெட்டுகளை விண்ணில் செலுத்தி அந்த திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இதில், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை விண்ணில் செலுத்த முடியும். அதேபோல், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
இந்நிலையில், 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களைப் புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைத்தது.
இந்த சிறிய ரக ராக்கெட்டுகள் அதிகபட்சமாக 120 டன் எடையில் இருக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி எஸ்எஸ்எல்வி -டி1, 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரோவின் இந்த புதிய திட்டம், ராகெட்டின் சென்சார் செயலிழந்து தவறான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதால் தோல்வியில் முடிந்தது.
முதல் முயற்சி தோல்வியுற்றாலும், இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.
அதன்படி மீண்டும் எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட்டை வடிவமைத்துள்ளது இஸ்ரோ. எஸ்எஸ்எல்வி – டி2, இஒஎஸ்-07 புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 3 செயற்கைக்கோள்களுடன் நாளை (பிப்ரவரி 10) காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 13 நிமிடங்களுக்குள், ராக்கெட் முதல் செயற்கைக்கோளான இஒஎஸ்-07-ஐ சுற்றுப்பாதையில் செலுத்துகிறது.
அதைத் தொடர்ந்து மற்ற இரண்டையும் தலா ஒரு நிமிட இடைவெளியில் செலுத்தவுள்ளது.
எனவே ராக்கெட் ஏவப்பட்ட 15 நிமிட பயணத்திலேயே செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் வைக்கப்படுகிறது.
முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-07, மொத்தம் 156 கிலோ எடை கொண்டது. இது புவி கண்காணிப்பு, கடலோர நிலப்பயன்பாடு,
ஒழுங்குமுறை, நகர்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படும்.
இதனுடன் அமெரிக்காவின் ஜானஸ் மற்றும் இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 பள்ளி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட ஆஸாதிசாட்-2 ஆகிய 2 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.
கடந்த முறை எஸ்எஸ்எல்வி -டி1 தோல்வியடைந்ததால் இந்த முறை எஸ்எஸ்எல்வி -டி2 ராக்கெட்டை செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக இருப்பதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
நாடாளுமன்ற உரை: கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!