வயநாடு நிலச்சரிவில் பெற்றோர், ஒரே தங்கை உள்பட 9 உறவினர்களை பறி கொடுத்த ஸ்ருதி என்ற இளம் பெண் இப்போது விபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு மாவட்டம் சூரல்மலை சிவண்ணன், அவரின் மனைவி சபிதா, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா , தாத்தா பாட்டி ஆகியோர் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். பக்கத்து வீட்டில் சிவண்ணனின் சகோதரர், அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வசித்து வந்தனர். இப்படி 9 பேர் கொண்ட அவர்களது குடும்பத்தில் நிலச்சரிவுக்கு பிறகு இப்போது ஸ்ருதி மட்டுமே மீதமிருக்கிறார்.
ஸ்ருதி கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். நிலச்சரிவின் போது, அங்கு பணியில் இருந்ததால் உயிர் தப்பித்தார். நிலச்சரிவில் சிக்கி ஸ்ருதியின் குடும்பத்தினர் அனைவரும் இறந்து போனார்கள். அதோடு, ஸ்ருதியின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த 15 பவுன் நகைகள், 4.5 லட்சம் பணமும் மண்ணோடு மண்ணாக புதைந்து போனது.
பெற்றோர், சகோதரி உள்பட 9 பேரை பறி கொடுத்து விட்டு தவித்து கொண்டிருந்த ஸ்ருதிக்கு ஒரே ஆறுதலாக வருங்கால கணவர் ஜென்சன் மற்றும் அவரின் குடும்பத்தினர்தான் இருந்தனர். ஜென்சனுக்கும் ஸ்ருதிக்கும் வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது.
இந்த நிலையில், ஜென்சன் ஸ்ருதி மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் நேற்று சென்று கொண்டிருந்துள்ளார். வேனை ஜென்சனே ஓட்டியுள்ளார். கோழிக்கோடு- கொல்லேகால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளாரம்குன்னு என்ற இடத்தில் வேன் சென்ற போது, எதிரே வந்த பஸ் மோதியது.
இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். ஸ்ருதிக்கு லேசான காயமும் ஜென்சன்படுகாயமும் அடைந்தனர். இருவருக்கும் மேப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதில், ஜென்சனுக்கு மண்டை ஓடு உடைந்து உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் ஜென்சன் உயிரை காப்பாற்ற எவ்வளவோ போராடினார்கள். ஆனால், பலன் கிடைக்கவில்லை. நேற்றிரவு ஜென்சன் இறந்து போனார்.
நிலச்சரிவில் குடும்பத்தையும், விபத்தில் வருங்கால கணவரையும் பறி கொடுத்த ஸ்ருதிக்கு ஆறுதல் கூற முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
நிலச்சரிவின் போது, உறவினர்களை பறிகொடுத்து தனியாக நின்ற ஸ்ருதியை எந்த சூழலிலும் கை விட மாட்டேன் என்று ஜென்சன் உறுதியாக பேசிய வீடியோ வைரலானது. பலரும், அந்த வீடியோவை பகிர்ந்து தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தோனிக்கு எதிராக கோலி போட்ட மாஸ்டர்-பிளான்: யஷ் தயாள் சுவாரஸ்ய தகவல்!