ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து கேட்டு தன்னையும் தன்னுடைய மகனையும் கைவிட்டுச் சென்றதாக அவரது மனைவி பிரமிளா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு 1968-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பிறந்தார். சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டம் படித்த பின்னர், 1989-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று பிரின்ஸ்டனில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். 1993-ஆம் ஆண்டு ஸ்ரீதர் வேம்பு பிரமிளா ஸ்ரீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சித்து என்ற மகன் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு 1997-ஆம் ஆண்டு பிரமிளா ஸ்ரீனிவாசன் அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினி பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 2010 ஆம் ஆண்டு முதல் அவர் மெடிக்கல்மைன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக தி பிரைன் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை 2019 ஆம் ஆண்டு தொடங்கினார். இதன் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2009-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜோஹோ மென்பொருள் நிறுவனத்தை ஸ்ரீதர் வேம்பு துவங்கினார். இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணிய ஸ்ரீதர் வேம்பு, 2019-ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.
கிராமப்புற மாணவர்களும் ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்றும் நோக்கத்தோடு தென்காசி மாவட்டத்தில் இவர் ஜோஹோ நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டில் ஜோஹோ நிறுவனம் 922 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது.
மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தென்காசியில் ஜோஹோ பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். கிராமப்புற வாழ்வியல் மீது காதல், சைக்கிள் பயணம், பழைய சோறு, மாணவர்களுக்கு உதவுதல் என எளிமையான வாழ்க்கையை ஸ்ரீதர் வேம்பு வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் தான் ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து கேட்டு தன்னையும் தன்னுடைய மகனையும் கைவிட்டுச் சென்றதாக அவரது மனைவி பிரமிளா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ஃபோர்ப்ஸ் நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீதர் வேம்பு அவரது மனைவி பிரமிளாவை விவாகரத்து செய்ய விரும்புவதாக கூறி கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாட்ஸப் மூலம் அவருக்கு தகவல் அனுப்பியுள்ளார். பின்னர் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது கடந்த ஜனவரி மாதம் பிரமிளா ஸ்ரீனிவாசன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், “ஸ்ரீதர் வேம்பு ஜோஹோ நிறுவன பங்குகளை இந்தியாவிற்கு மாற்றும்போது என் பெயரில் இருந்த பங்குகளை என்னுடைய ஒப்புதல் மற்றும் அனுமதி இல்லாமல் அவருடைய சகோதரிக்கு மாற்றியுள்ளார். அவர் என்னை மட்டுமல்ல எனது மகனையும் கைவிட்டுவிட்டார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட எனது மகனை நான் தான் கவனித்து வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகையிடம் பிரமிளா வழக்கறிஞர் ஜான் ஃபேர்லு கூறும்போது, “கலிஃபோர்னியாவில் உள்ள சமூக சொத்து சட்டத்தின்படி, மனைவியின் ஒப்புதல் இல்லாமல் சொத்துக்களை மாற்ற முடியாது. கணவன் மனைவி இருவருக்கும் அது சொந்தமானது.” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு அவரது மனைவி குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். அவர் இதுகுறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “நான் எனது மனைவியின் பங்குகளை யாருக்கும் மாற்றவில்லை. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களை மேம்படுத்துவதற்கான என்னுடைய கனவிற்காக நான் இந்தியாவிற்கு வந்துள்ளேன்.
பிரமிளா மற்றும் என்னுடைய மகன் சித்துவை இந்தியாவிற்கு அழைத்து வர முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டார்கள். நான் என்னுடைய மனைவியையோ மகனையோ எந்தவிதமான பொருளாதார நெருக்கடிக்களுக்கும் தள்ளியதில்லை

என்னுடைய மகனுக்கு ஏற்பட்ட ஆட்டிசம் நோய் எங்கள் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. பிரமிளா எனது மகனை நன்றாக பார்த்துக்கொண்டார். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அவனுக்கு நவீன சிகிச்சை முறைகளை அளித்து வருகிறோம். இதனால் ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால் இந்தியாவில் உள்ள ஏழை கிராமங்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தின் வாயிலாக தற்கொலை எண்ணத்திலிருந்து நான் மீண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது 27 ஆண்டுகால ஐ.டி வேலையில் 24 வருடங்கள் நான் அமெரிக்காவில் வாழ்ந்தேன். அங்கு வேலை பார்த்த கடைசி 3 வருடங்கள் நான் வாங்கிய மொத்த சம்பளத்தையும் எனது மனைவியிடம் தான் கொடுத்தேன்.
இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் எனது சித்தப்பா ராம் தான் காரணம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு கலிஃபோர்னியாவில் உள்ள எனது இல்லத்தில் அடைக்கலம் கொடுத்தேன். அவர் என்னை பற்றியும் என் உடன் பிறந்தவர்கள் பற்றியும் பிரமிளாவிடம் தவறாக கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக பிரமிளா எனது சித்தப்பா ராம் எங்களைப் பற்றி கூறும் அவதூறுகளை நம்பினார். இதனால் எங்களது திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்று விட்டது.
உண்மையும் நீதியும் நிச்சயமாக வெல்லும் என்று நான் நம்புகிறேன். இதற்கு முன்பு நான் பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்திருக்கிறேன். இதனையும் நான் சந்திப்பேன். இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் தொழில்நுட்ப நிறுவனங்களை நான் தொடர்ந்து உருவாக்குவேன். என் வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் ஒரே நோக்கம் என்றாவது ஒரு நாள் என் அன்பு மகன் என்னுடன் இங்கு வந்து சேர வேண்டும் என்பதே. எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
வருமான வரி செலுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு: செய்ய வேண்டிய முக்கிய வேலைகள்!