கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று (ஏப்ரல் 2) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பாம்பனுக்கும், இலங்கையின் டெல்த் தீவிற்கும் இடையே உள்ளது கச்சத்தீவு. சுமார் 1.15 சதுர கிலோ மீட்டர் பரப்பளவே கொண்ட இச்சிறிய தீவு 1974 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் இலங்கைக்கு தார்வார்க்கப்பட்டது.
தொடர்ந்து இந்திய மீனவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சில உரிமைகளும் 1976ஆம் ஆண்டு மீண்டும் போடப்பட்ட ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டன. இதனால் கச்சத்தீவு மீதான முழு உரிமையையும் இந்தியா இழந்தது.
இதனையடுத்து கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி சென்றதாக கூறி, அவர்களை கைது செய்வது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையின் அத்துமீறல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
காங்கிரஸ், திமுக – பாஜக குற்றச்சாட்டு!
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் தற்போது கச்சத்தீவு பிரச்னையை கையிலெடுத்துள்ள பாஜக தலைவர்கள், திமுக மற்றும் காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர்.
அதற்கு ”கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்பது குறித்து எதுவும் தீர்வு காணாமல், தேர்தல் சமயத்தில் தற்போது இதுகுறித்து பேசுவது ஏன்? என காங்கிரஸ், திமுக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்திய அரசு நடவடிக்கை!
இதற்கிடையே கச்சத்தீவு குறித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவரான அண்ணாமலை, “தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் விதமாக கச்சத்தீவை மீட்கும் விவகாரத்தில் நமக்கு முழு உரிமை உள்ளது. கச்சத்தீவு மீட்பது தொடர்பாக மத்திய அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது’ என கூறியிருந்தார்.
இதனையடுத்து கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையில் இந்திய அரசு உண்மையில் இறங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.
எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை!
இதுதொடர்பாக இன்று ஊடகத்திற்கு பேட்டியளித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான், “இலங்கையைப் பொறுத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் எங்களுக்கு அனுப்பவில்லை. கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை. அப்படி அனுப்பி இருந்தால், அதற்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் உரியவகையில் பதில் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
விருப்பத்திற்கேற்ப மாற்றம் கோர முடியாது!
மேலும், “கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தங்கள் விருப்பத்திற்கேற்ப யாரும் அதில் மாற்றத்தை கோர முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”கச்சத்தீவு விவகாரத்தில் பொய் பிரச்சாரம்” : திமுக, காங்கிரஸை விமர்சித்த நிர்மலா சீதாராமன்
”பாஜக டெபாசிட் இழக்க வேண்டும்” : கலாநிதிக்கு வாக்கு சேகரித்த உதயநிதி