இந்தியாவிலிருந்து தினமும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இப்படி அதிக அளவில் முட்டைகளை இறக்குமதி செய்தால், Avian Influenza எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும் அபாயம் அதிகம் உள்ளதாக இலங்கை கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்தது. இலங்கையின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து நாள்தோறும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக இந்தியாவில் உள்ள ஐந்து பெரிய பண்ணைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள இலங்கை அரசின் வா்த்தக நிறுவனத்தின் தலைவா் அசிரி வாலிசுந்தரா, “இந்தியாவில் நாள்தோறும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்ப அடுத்த கட்ட இறக்குமதி தொடா்பாக முடிவெடுக்கப்படும். பேக்கரி, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள், சமையல் ஒப்பந்த நிறுவனங்கள், உணவு விடுதிகளுக்கு ஒரு முட்டை இலங்கை ரூபாயில் ரூ.35 என்ற விலையில் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு என தெரிவித்து கண்டபடி முட்டைகளை இறக்குமதி செய்தால், Avian Influenza எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும் அபாயம் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம்.
மேலும், முட்டை இறக்குமதி செய்ய எடுக்கப்பட்டுள்ள முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ பொரியல்