கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் 20 ஆயிரம் கோழிகளை அழிக்க ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் தற்போது எச்5என்1 என்னும் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளில் 3வது முறையாகப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1,500 வாத்துகள் திடீரென இறந்தன.
ஏராளமான வாத்துக்கள் இறந்ததால் கால்நடை பராமரிப்புத் துறையினர் இறந்த வாத்துக்களின் மாதிரிகளைச் சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை முடிவில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. எனவே, ஆலப்புழா மாவட்டம் வாழுத்தனம் நகராட்சி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு,
அங்கிருந்து பறவைக் காய்ச்சல் வேறு இடங்களுக்குப் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி ஆலப்புழா கோழிப் பண்ணைகளில் உள்ள 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில்,பறவை காய்ச்சல் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு கேரளாவுக்கு செல்கிறது.
கேரளாவில் பொதுச் சுகாதார நடைமுறைகள், மேலாண் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பறவை காய்ச்சல் பரவலை எதிர்கொள்வதற்கான ஒழுங்குமுறைகள் உள்ளிட்ட விசயங்களில் மாநில சுகாதாரத் துறைக்கு உதவியாக இந்த குழு செயல்படும்.
அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சலால் 1500 வாத்துக்கள் இறந்துள்ளதால்,
தமிழகத்தில் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் கிருமி நாசினிகளை தெளித்து வருகின்றனர். கோழிகளுக்கு நோய் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதற்கு வாய்ப்பில்லை என்று பண்ணை உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் தமிழகத்திலிருந்து தினசரி கேரளாவிற்கு முட்டைகள் அனுப்பப்படும் நிலையில் பறவை காய்ச்சல் காரணமாக கோழி மற்றும் முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்படும் என்று பண்ணை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
ட்விட்டர் நிறுவன தலைகளுக்கு ஆப்பு: அதிரடியில் இறங்கிய எலான் மஸ்க்
கோவை கார் வெடிப்பு: போலீஸ் விசாரணையில் புது தகவல்!