ஒரு முதுகெலும்பு பார்சல்… ஜெய்சங்கருக்கு வந்த சோதனை!

Published On:

| By Kumaresan M

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள், அந்த நாட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் இந்தியர்களின் காலில் செயின் போட்டு கட்டியிருந்துள்ளனர். கைகளில் விலங்கும் மாட்டப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் வெளியாகி இந்தியாவில் பெரும் சர்ச்சை எழுந்தது. ‘டிரம்ப் எனது நண்பர் என்று மோடி சொல்லிக் கொள்கிறார்? அந்த நண்பர்தான் இந்தியர்களை இப்படி நடத்துகிறார் ‘ என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது.

சட்ட விரோத குடியேறிகளை அமெரிக்கா தனது ராணுவ விமானத்தில் அனுப்புவதை விரும்பாத கொலம்பிய அரசு என்ன செய்தது தெரியுமா? தங்கள் நாட்டு விமானத்தை அனுப்பி அமெரிக்காவில் இருந்த தங்கள் குடிமக்களை மீட்டு கொண்டது.

ஆனால், இந்தியா போன்ற பலம் வாய்ந்த நாடு , அமெரிக்க ராணுவ விமானத்தில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை தாயகத்துக்கு அனுப்பியதை ஏற்றுக் கொண்டதே வெட்கக்கேடான செயல் என்றும் கொலம்பியாவுக்கு உள்ள தைரியம் கூட இந்தியாவுக்கு இல்லையா? என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

மத்திய அரசின் முதுகெலும்பு இல்லாத நடத்தையை கண்டித்து கேரள மாநிலத்தை சேர்ந்த எதிர்க்கட்சியினர் வித்தியாசமான முறையில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளர். இவர்கள், அமேசானில் முதுகெலும்பு ஒன்றை ஆர்டர் செய்து, டெல்லியிலுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிப்ரவரி 11 ஆம் தேதி இந்த முதுகெலும்பு ஜெய்சங்கரின் அலுவலகம் சென்றடையும்.

அமெரிக்காவுக்குள் அதன் அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து நுழைவதுதான் எளிதானது. எனவே, கிட்டத்தட்ட 40 லட்சம் மெக்சிகோ மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைந்துள்ளனர்.

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். 7.25 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் நுழைந்துள்ளனர். 3.5 லட்சம் சீனர்களும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக புகுந்து வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் மெக்சிகோ அல்லது பனமா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share