நடைபெற்று வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சோனியா காந்தி தலைமையில் இன்று (செப்டம்பர் 10) விவாதம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் புதிய நாடாளுமன்றத்தில் நேற்று தொடங்கியது.
இரு அவைகளும் முதன்முறையாக கூடிய நிலையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தினார். அதற்கு நாரி சக்தி வந்தன் ஆதினியம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை முதலில் காங்கிரஸ் அரசே கொண்டு வந்தது. தற்போதைய பாஜக அரசு காங்கிரஸூக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் மதியத்திற்கு பிறகு தொடங்கிய மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆதரவு கோரிய மோடி!
அதனைத்தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
அவர், “கொள்கை வகுப்பில் பெண்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டதன் மூலம் ’செப்டம்பர் 19ஆம் தேதி’ வரலாற்றில் அழியாத நாளாக இருக்கப் போகிறது.
இன்னும் சில நாட்களில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அடுத்த சில நாட்களில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இங்கு எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. எனினும் நாட்டின் நலன் கருதி மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று மோடி பேசினார்.
காங்கிரஸ் எதிர்ப்பு!
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் தங்களது விவாதத்தில், “அரசாங்கம் இன்னும் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை, அதன் பின்னரே மகளிர் இடஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளது. இது ஆளும் பாஜக அரசின் சூழ்ச்சி. இந்த மசோதாவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்த போவதில்லை என்பதில் இருந்தே இதனை உணர முடியும்.
தற்போது பாஜக கொண்டுவந்துள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு வழக்கமான “தேர்தல் நாடகம்” மற்றும் கோடிக்கணக்கான இந்திய பெண்களின் நம்பிக்கைக்கு பெரிய துரோகம் இன்று இழைக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி மற்றும் கடுமையான விவாதத்தில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
விவாதத்தில் சோனியா காந்தி தலைமை!
இதற்கிடையே சிறப்பு கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு இன்று காலை தொடங்கி இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவாதம் நடைபெற உள்ளது.
மக்களவையில் நடைபெற உள்ள இந்த மசோதா மீதான விவாதத்திற்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்க உள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, மகளிர் இடஒதுக்கீடு மசோதா தங்கள் கட்சியின் மூளையில் உருவானது என்றும், இது எங்களுடையது என்றும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மசோதாவின் அம்சங்கள் என்ன?
மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது நாரி சக்தி வந்தன் மசோதா என்பது 128-வது அரசியலமைப்பு திருத்த மசோதா ஆகும்.
இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
இதன்பிறகு நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் சுமார் 50 சதவீத மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் நாரி சக்தி வந்தன் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
கடந்த 2021-ம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வரும் 2026-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு தான் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் செய்யப்படும்.
அதன்படி வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதுதான் மசோதா அமலுக்கு வரும். சட்ட மசோதா அமலுக்கு வந்த பிறகு 15 ஆண்டுகள் செல்லுபடியாகும். அதன்பிறகு காலத்தை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா