மத்திய பிரதேச மாநிலம் திகம்கர் மாவட்டத்திலுள்ள லிதோரேட்டால் கிராமத்தை சேர்ந்தவர் தியோனிசிங் கோஷ். 84 வயதாகும் இவருக்கு கிஷன், தாமோதர் என்று இரு மகன்கள் உண்டு. இளையமகன் தாமோதர் வீட்டில் தியோனிசிங் வசித்தார். இதற்கிடையே ,தியோனிசிங் உடல் நலம் குன்றி மரணம் அடைந்தார்.
தகவல் அறிந்த அண்ணன் கிஷன், தம்பியின் வீட்டுக்கு சென்று, நான் தான் மூத்த மகன். எனவே இறுதிச்சடங்கு செய்ய தனக்குதான் உரிமையுள்ளதாக கூறி சண்டை போட்டார். ஆனால், தாமோதர் தந்தைக்கு தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டுமென்று விரும்பினார். எனவே, ‘நான் தான் இறுதிச்சடங்கு செய்வேன்’ என்று மறுப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்குமிடையே தகராறு முற்றியது.
ஊரார் இருவரையும் சமாதானப்படுத்தினர். ஆனால், மது போதையில் இருந்த கிஷன், சமாதானமாகவில்லை. இறந்து போனவரின் விருப்பப்படிதான் இறுதிச்சடங்கு நடக்க வேண்டுமென ஊராரும் கூறி விட்டனர். இதனால், ஆத்திரமடைந்த கிஷன் அப்படியென்றால் இறந்த தந்தையின் உடலை இரண்டாக வெட்டி ஒரு பகுதியை தனக்கு தரும்படியும், அதற்கு தான் இறுதிச்சடங்கு செய்து கொள்வதாகவும் கூறினார்.
இதை கேட்ட அங்கிருந்த ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஊரார் எவ்வளவோ கூறியும் கிஷனை சமாதானப்படுத்த முடியவில்லை. கடைசியில் ஊரார் போலீசாரிடத்தில் விஷயத்தை கொண்டு சென்றனர். தொடர்ந்து, போலீசார் அங்கு வந்து சகோதரர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் ஒருவழியாக தியோனி சிங்கின் இறுதிச்சடங்கு நல்லமுறையில் நடந்து முடிந்தது. இளையமகன் தாமோதர் இறுதிச்சடங்கை செய்தார். கிஷனும் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.
இந்த சம்பவம் குறித்து தாமோதர் கூறுகையில், ’எனது தந்தை உடல் நலம் குன்றியிருந்த போது, நான்தான் பார்த்துக் கொண்டேன். எனது அண்ணன் பராமரிக்கவில்லை. எனது தந்தை நான்தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டுமென விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றினேன்’ என்று தெரிவித்துள்ளார்.