குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டுக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 2) இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்தேறிய கோத்ரா கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் கலவரம் தொடர்பாக மோசடி சாட்சியங்களை தயாரித்ததாக கூறி கடந்த ஜூன் 25ல் குஜராத் போலீஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து சமூக செயற்பாட்டாளர்கள் தீஸ்தா சீதல்வாட்டின் கைதுக்கு நாட்டின் பல்வேறு அமைப்பினரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர்.
மேலும், மத்திய அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் கண்டனம் தெரிவித்ததுடன், அவரை விடுதலை செய்யவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் தீஸ்தா சீதல்வாட் மீதான ஜாமீன் மனு இன்று (செப்டம்பர் 2) விசாரணைக்கு வந்தது.
இதனை தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதிகள் ரவீந்திர பாத், சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.
இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், தீஸ்தாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
”தீஸ்தா சீதல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கலாமா என்ற ஒற்றைப் புள்ளியை மட்டுமே பார்த்து உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
எனினும் தீஸ்தாவுக்கு ஜாமீன் வழங்குவது பற்றி குஜராத் உயர் நீதிமன்றம் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்.
உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் குஜராத் உயர் நீதிமன்றத்தின் முடிவில் தாக்கங்களை ஏற்படுத்த தேவையில்லை” என்று உச்ச நீதிமன்ற நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தீஸ்தா தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
–கிறிஸ்டோபர் ஜெமா
குஜராத் பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்தது யார்? பட்டியலிட்ட ப.சிதம்பரம்