மும்பையில் கடற்கரையோரம் அருகே ரூ.70 கோடியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டப்படுவதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மும்பையையொட்டி இருக்கும் நவிமும்பை பகுதியில் உள்ள ‘உல்வே’ என்ற இடத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டப்பட இருக்கிறது. இங்கு கோயில் கட்டிக்கொள்ள மாநில அரசு கடந்த ஆண்டே நிலம் ஒதுக்கி இருக்கிறது.
ஆரம்பத்தில் இந்தக் கோயிலை மும்பை நகருக்குள் கட்டத் திட்டமிடப்பட்டது. ஆனால் போதிய நிலம் இல்லாத காரணத்தால் உல்வேயில் மாநில அரசு, செக்டர் 12இல் 10 ஏக்கர் நிலத்தைத் திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்திடம் கொடுத்தது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடியாகும்.
திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோயில் போன்ற வடிவத்தில் ரூ.70 கோடியில் இந்த இடத்தில் புதிய கோயில் கட்டப்பட இருக்கிறது.
புதிதாக அமைய இருக்கும் விமான நிலையம் அருகில் கடற்கரையோரத்தில் கோவிலுக்கான இந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கோயிலுக்கான பூமி பூஜை வரும் 7ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் கலந்து கொள்கிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடப்பதாக இருந்தது. ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கடைசி நேரத்தில் பூமி பூஜை நடத்துவது ரத்து செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் இந்தக் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் பி.என்.குமார் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “மும்பை – நவிமும்பை இடையே கடல் பாலம் அமைக்க, யார்டு அமைக்க என அதிக அளவில் மாங்குரோவ் செடிகள் வெட்டப்பட்டது. இதில் அதிக அளவில் விதிமுறை மீறல்கள் நடந்திருக்கிறது. அது பற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இப்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்ட கடற்கரையோரம் நிலம் ஒதுக்கி இருக்கிறார்கள்.
கடற்பாலம் கட்டும் பணி முடிந்துவிட்டதால் யார்டுப் பகுதியை காலி செய்துவிட்டு கடல் தண்ணீர் உள்ளே வந்து செல்ல வகை செய்ய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக எல் அண்ட் டி நிறுவனம் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் இடத்தில் யார்டு அமைத்திருக்கின்றனர். இதனால் அவர்களால் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பணிகள் முடிந்திருப்பதால் மீண்டும் அந்த இடம் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இப்போது அதே நிலத்தை திருப்பதி பாலாஜி கோயில் கட்ட ஒதுக்கப்பட்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, ‘சாகர் சக்தி’ என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நந்தகுமார் பவார் கூறுகையில், “தற்போது கோயிலுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலம் மாங்குரோவ் செடிகள் அதிகமாக இருக்கும் இடமாகும். அதோடு கடல் நீர் வந்து செல்லக்கூடியது.
கடற்கரையோர விதிமுறைகளை மீறி சிட்கோ நிர்வாகம் கோயில் கட்ட மாங்குரோவ் செடிகள் இருக்கும் இடத்தை ஒதுக்கி இருக்கிறது. எனவேதான் கோயிலை வேறு இடத்தில் கட்டும்படிக் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும் நவிமும்பையில் அமையும் விமான நிலையமே சுற்றுச்சூழல் விதிகளை மீறித்தான் கட்டப்பட்டு வருகிறது. விமான நிலையத்துக்காக ஒரு மலையை உடைத்து அதில் கிடைக்கும் பாறைக் கழிவுகளைக் கடற்கரையில் போட்டு நிலத்தைக் கையகப்படுத்தி வருகின்றனர். பல மாதங்களாக மலை உடைக்கப்பட்டு வருகிறது.
அதோடு ஓர் ஆற்றின் வழித்தடத்தையும் மாற்றி அதனை வேறு வழியாகத் திருப்பியுள்ளனர். இப்போது திருப்பதி பாலாஜி கோயிலுக்கும் கடற்கரையொட்டி நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கொதிப்படைய செய்துள்ளது.
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
இணையத்தில் வைரலாகும் தோனி ரசிகரின் திருமண அழைப்பிதழ்!