கர்நாடகாவில் சிவமூர்த்தி முருகா ஷரணாரு என்ற சாமியார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நேற்று (செப்டம்பர் 1) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள முருகா மடத்தில் சிவமூர்த்தி சாமியாராக இருந்து வருகிறார். லிங்காயத் மதத்தில் மிக முக்கியமான மதகுருவாக இவர் கருதப்படுகிறார்.
கர்நாடாகவில் முருகா மடத்தின் சார்பில், ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. அந்தப் பள்ளிகளில் படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு சாமியார் சிவமூர்த்தி இரண்டு வருடங்களுக்கு மேலாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார்.
மைசூரில் செயல்பட்டு வரும் ஒரு அரசு சாரா அமைப்பை தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட மாணவிகள் மைசூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
பொதுமக்கள், செயற்பாட்டாளர்கள் சாமியார் சிவமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். இதனடிப்படையில், சாமியார் சிவமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் நசர்பாத் போலீசார் நேற்று (செப்டம்பர்1) இரவு 10 மணியளவில் கைது செய்துள்ளனர்.
அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சிவமூர்த்தி சாமியார் மீது பதியப்பட்ட வழக்கு பொய்யானது என்று தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட சாமியார் சிவமூர்த்தி நெஞ்சு வலி காரணமாக, சித்திரதுர்கா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, தமிழகத்தில் சென்னை கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில்,
சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர், டேராடூன் மருத்துவமனையிலிருந்து தலைமறைவானார். 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிபிசிஐடி போலீசாரால் டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.
அவரை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தநிலையில் நெஞ்சு வலி காரணமாக மீண்டும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சாமியார்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டவுடன், நெஞ்சு வலி என்று கூறி போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்
நித்தியானந்தா எங்கிருக்கிறார்?: கிடைத்த ரகசிய தகவல்!