சிலிகுரி உயிரியல் பூங்காவில் உள்ள சீதா, அக்பர் என்ற சிங்கங்களின் பெயரை மாற்றுமாறு மேற்குவங்க அரசு மற்றும் பூங்கா நிர்வாகத்திற்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 22) உத்தரவு பிறப்பித்துள்ளது.
திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு சீதை, அக்பர் என்று பெயர் வைக்கப்பட்ட இரண்டு சிங்கங்கள் கடந்த 12ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. மேலும் அவை ஒரே கூண்டிலும் அடைக்கப்பட்டன.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு சார்பில் இரண்டு சிங்கங்களையும் ஒன்றாக வைத்திருக்க கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ”ராமரின் மனைவியாக இருக்கும் சீதை இந்து மத வழக்கங்களின் படி தெய்வமாக கொண்டாடப்படுகிறார். இந்த நிலையில் ஒரே பூங்காவில் சீதை பெயர் கொண்ட சிங்கத்தை, புகழ்பெற்ற இஸ்லாமிய மன்னர்களில் ஒருவரான அக்பர் என பெயரிடப்பட்ட சிங்கத்துடன் ஒரே கூண்டில் அடைத்து வைத்திருப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். அக்பரின் துணை சீதையாக இருக்க முடியாது. எனவே சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்” என்று விஎச்பி தரப்பில் வாதிடப்பட்டது.
மாநில அரசு வழக்கறிஞரோ, ‘இது எதுவும் திட்டமிட்டு நடைபெறவில்லை. இரண்டு சிங்களுக்கும் மேற்கு வங்காளத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பாகவே திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த அதிகாரிகளால் சீதா, அக்பர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கினை ஒத்திவைத்தார். தொடர்ந்து இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா தீர்ப்பு வழங்கினார்.
அவர் மேற்கு வங்க மாநில அரசின் வழக்கறிஞரிடம், “மிஸ்டர் வக்கீல், நீங்களே உங்கள் சொந்த செல்லப் பிராணிகளுக்கு இந்து கடவுள் அல்லது முஸ்லீம் நபியின் பெயரை வைப்பீர்களா?
நம்மில் யாரேனும் அதிகாரம் பெற்றிருந்தால், சிங்கங்களுக்கு அக்பர் மற்றும் சீதா என்று பெயரிட்டிருக்க மாட்டோம். ரவீந்திரநாத் தாகூரின் பெயரை ஒரு விலங்குக்கு வைக்க நம்மில் யாராவது நினைக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து “இந்தப் பெயரை யார் வைத்தது என்று தெரியாது என்கிறீர்கள். நீங்கள் ஒரு பொதுநல அரசு, மதச்சார்பற்ற அரசு. ஏன் சிங்கத்துக்கு சீதை, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்? இந்த சர்ச்சை தவிர்க்க வேண்டும்.
சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என்று பெயர் வைப்பதை நானும் ஆதரிக்கவில்லை. அக்பர் மிகவும் திறமையான, வெற்றிகரமான மற்றும் மதச்சார்பற்ற முகலாய பேரரசராக இருந்தார். அதே போன்று சீதா தேவியையும் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வழிபடுகிறார்கள்.
எனவே சர்ச்சைகளை தவிர்க்க இரண்டு சிங்கங்களுக்கும் வேறு சில பெயர்களை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்கள் பெயர்களை இனி விலங்குகளுக்கு சூட்ட வேண்டாம்” என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எலக்ஷன் ஃபிளாஷ் : பானையை தக்க வைக்க திருமாவின் திடீர் உத்தி!
’தெளிவாக எழுதி கொடுங்கள்’ : மருத்துவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!