ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கேரள அரசை குறை கூறியுள்ள கேரள உயர்நீதிமன்றம், ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
கொச்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகை ஒருவர் காரில் வைத்தே பாலியல் வன்கொடுமைக்குள்ளானார். இதையடுத்து, கேரள அரசு மலையாள படவுலகில் நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிக்க ஹேமா கமிஷனை நியமித்தது. இந்த கமிஷன் கொடுத்த அறிக்கை வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஏகே ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது, நீதிபதிகள் கேரள அரசு செயல்படாமல் இருப்பதாக கடுமையாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், “ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த 2019-ம் ஆண்டே கேரள டி.ஜி.பியிடம் அளிக்கப்பட்ட போதிலும், 4 ஆண்டுகளாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசின் இயங்காத நிலை அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற ஒரு பிரச்னை இருப்பதை ஹேமா அறிக்கை கூறிய பின்பும் அரசு எடுத்த குறைந்தபட்ச நடவடிக்கை என்ன ?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
திரையுலகில் மட்டுமல்லாமல், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஆண்களை விட பெண்கள் அதிகம் வசிக்கும் இது போன்ற ஒரு மாநிலத்தில் காணப்படும் சூழல் அதிர்ச்சியளிக்கிறது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதே வேளையில், சிறப்பு புலனாய்வு போலீஸ் குழு இன்னும் ஹேமா கமிட்டி அறிக்கையை முழுமையாக படிக்கவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால், கோபமடைந்த நீதிபதிகள் மொத்த அறிக்கையையும் எந்த திருத்தமும் இல்லாமல் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். விரைவில் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ராயன் பட நடிகர்தான் நடிகர் விஜய் மகனின் முதல் ஹீரோ?
சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ… பணிகள் விறுவிறு!