சகோதரத்துவத்தை போற்றும் ராக்கி பண்டிகை நெருங்கும் நிலையில், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்து தம்பியை காப்பாற்றிய அக்காவின் தியாகம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ராகுல் பாட்டீல். 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராகுலின் பெற்றோர், அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்களால் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை.
அறுவை சிகிச்சை அவசியம்!
இதற்கிடையே நோயின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், ராகுலை நவி மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு ராகுலுக்கு ’ஆட்டோ இம்யூன் லிவர் சிரோசிஸ்’ எனப்படும் கல்லீரல் நோய் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த நோய் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரின் உடம்பில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அவரது சொந்த கல்லீரல் செல்களுக்கு எதிராகவே செயல்படத் துவங்கும்.
இது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், மருந்துகளால் குணப்படுத்த முடியும். ஆனால் ராகுலுக்கு தாமதமாக கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு தொடர்ந்து இரத்தப்போக்கு, ஆஸ்கைட்ஸ் எனப்படும் அதிகளவில் வயிற்றில் திரவம் குவிதல் மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
இதனையடுத்து அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
தம்பிக்காக தானம்!
அதன்படி முதலில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக கல்லீரல் தானம் செய்ய தகுதியுடையவர் யார் என்ற பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ராகுலின் தாயாருக்கு HbsAg பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், அவரது 21 வயது சகோதரி நந்தினி பாட்டீல் முழுமையான பரிசோதனைக்கு பிறகு தகுதியானவர் என்று கண்டறியப்பட்டார்.
தொடர்ந்து, சிறிதும் அச்சம் அடையாமல் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்து தம்பியின் உயிரை காப்பாற்றியுள்ளார் நந்தினி.
தம்பி தான் எனக்கு உலகம்!
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது தம்பி தான் எனக்கு உலகம். ரக் ஷா பந்தன் அன்று அவனுக்கு ஒரு மதிப்புமிக்க பரிசை வழங்கியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
பல மாதங்களாக அவனது உடல்நிலை குறித்து நாங்கள் அனைவரும் மிகவும் கவலைப்பட்டோம். இப்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து இரண்டாவது வாழ்க்கையை கொடுத்த மருத்துவர்களுக்கு நன்றி” என்று நந்தினி பாட்டீல் கூறியுள்ளார்.
தனது அக்காவின் தியாகம் குறித்து ராகுல் கூறுகையில், “எனக்கு விலைமதிப்பற்ற இந்த ராக்கி பரிசு கொடுத்து என் அக்கா என்னை ஆச்சரியப்படுத்தினார். அவளுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவளுடைய அன்பு
எனக்கு மறு வாழ்க்கையை கொடுத்துள்ளது” என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
உடன் பிறந்தவர்களுக்கு தங்களது அன்பை வெளிப்படுத்தும் நாளாக ரக்ஷா பந்தன் வரும் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி நடந்துள்ள இந்த சம்பவம் இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் சகோதரத்துவத்தை போற்றும் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தம்பி ராகுலுக்காக அக்கா நந்தினி பாட்டீல் செய்துள்ள மிகப்பெரிய தியாகத்தை குறிப்பிட்டு ’இதுதான் விலைமதிப்பற்ற ராக்கி’ என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
மோடி குறித்து செய்தி வெளியீடு: பிரபல இணையதளம் மீது சைபர் தாக்குதல்!
பணம் வேணாம்னு சொன்னதுக்கு இதுதான் காரணம்… லாரன்ஸ் விளக்கம்!
பழுதாகி நின்ற பேருந்து: மாணவிகளை தள்ள வைத்த 4 பேர் சஸ்பெண்ட்