அமெரிக்க வங்கிகள் திவால் : ஜோ பைடனுக்கு நெருக்கடி!

இந்தியா

அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) திவாலானது குறித்து அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்துவிட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது சிலிக்கான் வேலி வங்கி. இது அமெரிக்காவின் 16ஆவது பெரிய வங்கியாகும். இதன் சொத்து மதிப்பு ரூ. 17.22 லட்சம் கோடியாக (209 மில்லியன் டாலர்) இருந்தது. மொத்த டெபாசிட் தொகை ரூ.14.34 லட்சம் கோடியாக (174 மில்லியன் டாலர்) இருந்தது.

சுருக்கமாக எஸ்விபி என அழைக்கப்படும் இந்த வங்கி கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் வெஜ்ஞர் கேப்பிடல் (துணிகர முதலீடு) நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான டெபாசிட் பெறுதல், நிதி உதவி வழங்குதல் சேவையை செய்து வந்தது.

இந்நிலையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்தது. மொத்தம் ஆறு தவணையாக 3.75% வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் வங்கியில் டெபாசிட் செய்வதை காட்டிலும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆர்வம் காட்டின.

எனவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிலிக்கான் வங்கியில் இருந்து டெபாசிட்டுகளை திரும்பப் பெறத் தொடங்கின. இதனால் நெருக்கடியை சந்தித்த சிலிக்கான் வேலி வங்கி புது பங்குகளை வெளியிட்டும், பத்திரங்களை விற்றும் நிலைமையை சமாளிக்க முயற்சி செய்தது. ஆனாலும் போதிய நிதியை திரட்ட முடியவில்லை. சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகள் 60 சதவிகிதம் சரிந்தன. இதனால் வங்கியை மூட அமெரிக்காவின் கண்காணிப்பு அமைப்பு உத்தரவிட்டது. கடந்த மார்ச் 10ஆம் தேதி வங்கி திவால் ஆனதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக வங்கியில் முதலீடு செய்தவர்கள் தங்களது பணத்தை கேட்டு, வங்கி முன் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுபோன்று ஐடி துறையிலும் இந்த வங்கி வீழ்ச்சியில் தாக்கம் இருக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவிலும் வளர்ந்து வரும் ‘ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்களை இந்த வீழ்ச்சி பாதிக்கும் என அச்சம் எழுந்தது.

இந்த சூழலில் சிலிக்கான் வேலி வங்கி வாடிக்கையாளா்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

இதுகுறித்து இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் கூறுகையில், “ அமெரிக்க அரசின் சமீபத்திய அறிவிப்பால், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான ஆபத்து கடந்துவிட்டதாகவும், இந்திய வங்கிகள் மீது கூடுதல் நம்பிக்கையை வைக்க வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.

சிலிக்கான் வங்கியைத் தொடர்ந்து , நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட சிக்நேச்சர் வங்கியும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதன் பங்கு விலையும் கடுமையாக சரிந்தது. இதனால் இந்த வங்கி கடந்த மார்ச் 12ஆம் தேதி மூடப்பட்டது.
சிக்நேச்சர் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்காவின் பெடரல் வங்கியும், மத்திய வைப்பு நிதி காப்பீட்டுக் கழகமும் கூட்டறிக்கை வெளியிட்டன.

இந்தசூழலில் நேற்று( மார்ச் 13) செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், சிலிக்கான் வங்கி திவால் ஆனது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

“அமெரிக்காவின் வங்கி அமைப்பு பாதுகாப்பானது மற்றும் வரி செலுத்துவோரின் டாலர்கள் ஆபத்தில் சிக்காது. சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கியில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார் பைடன்.

அப்போது அவரிடம் வங்கிகள் சரிவை சந்தித்துள்ளன. ஏன் இப்படி நடந்தது. என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமாகக் கூறமுடியுமா?. அமெரிக்கர்களுக்கு இனி இதுபோன்று நடக்காது என உறுதி அளிக்கக்க முடியுமா? என நிருபர் ஒருவர் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்காமல் செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் ஜோ பைடன். வங்கிகள் திவால் ஆனது ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா

மனைவியும் குழந்தையும்: ஸ்ரீதர் வேம்பு தரும் விளக்கம்!

வருமான வரி செலுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு: செய்ய வேண்டிய முக்கிய வேலைகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *