ஷ்ரத்தா கொலை – சந்தேகம் வந்தது எப்படி?: தந்தை பேட்டி!

இந்தியா

ஷ்ரத்தாவின் கொலை வழக்கில் கைதான அப்தாப் கூறும் வாக்குமூலத்தை தன்னால் கேட்கவே முடியவில்லை என்று அவரது தந்தை விகாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர் இளம்பெண் ஷ்ரத்தா வால்கர். 27 வயதான இவர் மும்பையில் பணிபுரிந்தபோது, அவருக்கு 28 வயதான அப்தாப் பூனாவாலா டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமானார்.

இருவரும் டெல்லியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ஷ்ரத்தாவை காதலன் அப்தாப்பே கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து 6 மாதங்கள் கடந்து தற்போது வெளிச்சத்துக்கு வந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது மகள் இல்லை என எப்படி தனக்குச் சந்தேகம் வந்தது என ஷ்ரத்தாவின் தந்தை பேட்டி அளித்துள்ளார்.

ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் வால்கர் என்டிடிவியிடம் கூறுகையில், “கொலையாளி அப்தாப் பூனாவாலா என் முன் தான் வாக்குமூலம் அளித்தார். போலீசார் என்னை பார்த்து இவரை உனக்கு தெரியுமா என பூனாவாலாவிடம் கேட்டனர்.

அவரும், தெரியும் ஷ்ரத்தாவின் தந்தை என்றார். இதையடுத்து ஷ்ரத்தா இனி இந்த உலகில் இல்லை இறந்துவிட்டாள் என்று கூறியதும் நான் அங்கேயே சரிந்துவிட்டேன். அவர் கூறுவதை எல்லாம் என்னால் கேட்கவே முடியவில்லை. பின்னர் அங்கிருந்து அவர் அழைத்து செல்லப்பட்டார்.

என் மகள் அனுபவித்த கொடூரத்தை எல்லாம் என்னால் கேட்கவே முடியவில்லை. முன்னதாக ஷ்ரத்தாவுக்கு என்ன நடந்தது என காவல்துறை என்னிடம் கூறியபோதும், அதை கேட்டு என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவர்கள் சொல்வதை கேட்டு என்னால் எதுவும் பேச முடியவில்லை. அப்படியே வாயடைத்து நின்றுவிட்டேன். கொலை தொடர்பான விவரங்கள் கேட்க அவ்வளவு கஷ்டமாக இருந்தது. கொலை செய்யப்பட்ட அந்த குடியிருப்புக்குள் செல்லும் போது திகிலூட்டும் வகையில் இருந்தது” என்று குறிப்பிட்டார்.

shraddha walker murder case

சந்தேகம் எப்படி வந்தது என்பது தொடர்பாக பேசிய அவர், “ ஷ்ரத்தாவின் நண்பர்கள் மூலம் அவர் காணவில்லை என்று தெரிந்துகொண்டு டெல்லி வந்தேன்.

இரண்டரை வருடம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தீர்களே, இதுதொடர்பாக ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று அப்தாப்பிடம் கேட்டபோது, தற்போது நாங்கள் உறவில் இல்லாத போது ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று கேட்டார். இவ்வாறு எப்படி கை கழுவிவிட்டு செல்லும் வகையில் பேசமுடியும்.

அப்போது எனக்கு ஏதோ தவறாக நடக்கிறது என்று சந்தேகம் வந்தது. அப்தாப் பொய் சொல்கிறார் என்று போலீசாரிடம் கூறினேன்.

அவர் என் மகளைக் காதலித்து இரண்டரை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் ஷ்ரத்தாவை கவனித்துக்கொள்வது அவருடைய பொறுப்பு. ஆனால் ஷ்ரத்தாவை பார்த்துக் கொள்வது என் பொறுப்பு இல்லை என்று அப்தாப் எப்படி கூற முடியும்.

ஷ்ரத்தா அப்தாப்புடன் உறவில் இருந்ததால் 2021 நடுப்பகுதியிலிருந்து நாங்கள் அவளிடம் பேசவில்லை. 2020 காலகட்டத்திலேயே அப்தாப்பை எங்களுக்குத் தெரியும். அப்போதே இவர் உனக்கு ஏற்றவர் இல்லை என்று ஷ்ரத்தாவிடம் சொன்னேன். அவள் கேட்கவில்லை.

அப்தாப்பை திருமணம் செய்து கொள்ளாதே. நமது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து வைக்கிறேன் என ஷ்ரத்தாவிடம் கூறினேன். அதையும் அவள் கேட்கவில்லை.

அப்தாப் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சாதாரணமாகத்தான் இருப்பார். அப்போது, இவ்வளவு கொடூரமானவர் என்று தெரியவில்லை. அப்தாப்புக்கு நிச்சயம் மரண தண்டனை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரியா

செந்தில் பாலாஜியை விமர்சிக்க தடை!

சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி: தரவரிசைப்பட்டியல் வெளியீடு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *