அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வீட்டருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான வீடு மற்றும் கோல்ஃப் மைதானத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைதானத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், டிரம்பை குறிவைத்து நடத்தப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து டிரம்ப் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது பிரச்சார செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவருடைய வலது காதில் காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகத்திற்குரிய நபர் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே டிரம்ப் வீட்டருகே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக 58 வயதான ரியான் வெஸ்லி ரூத் என்பவரை புளோரிடா மாகாண போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
ரியான் ரூத், வட கரோலினா கிரீன்ஸ்போரோவைச் சேர்ந்த முன்னாள் கட்டுமான தொழிலாளி என்றும், அவரிடமிருந்து ஒரு AK-47 துப்பாக்கி, GoPro கேமரா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் எப்.பி.ஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சிறப்பு தள்ளுபடி: கார், பைக், மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரிப்பு!
சென்னை அண்ணாவின் வீட்டை நினைவு இல்லமாக்க வேண்டும்: திருப்பூர் சு.துரைசாமி