தேர்தல் நேரத்தில் அரசு வாகனங்களில் பணம் எடுத்துச்செல்லப்பட்டதாக செல்போன் ஒட்டுகேட்பு வழக்கில் கைதான தெலுங்கானா காவல் அதிகாரி தெரிவித்துள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 மக்களைவைத் தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக அடுத்த மாதம் மே 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ள ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் சந்திக்கும் முதல் மக்களவை தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையே தற்போது தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் வெளிவரும் தகவல்கள் அம்மாநிலத்தில் அடுத்தடுத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
2014ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவானது முதல் கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி (பி.ஆர்.எஸ்) கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோற்றது.
இந்தநிலையில் சந்திர சேகர் ராவ் ஆட்சியின் போது, ரேவந்த் ரெட்டி உட்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளை காவல்துறையினர் ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ண ராவை தெலுங்கானா போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுதொடர்பாக போலீஸ் தாக்கல் செய்த ரிமாண்ட் அறிக்கையின்படி, ஒட்டு கேட்பில் கிடைக்கும் தகவல் மூலம் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கு நிதி வழங்க தொழிலதிபர்கள், நடிகர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.
2023 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டியுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து ரூபாய் 3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
பாரத ராஷ்டிர சமிதியின் உறுப்பினரின் உத்தரவின் பேரில் தான் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது. பின்னர் அதுதொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டது என ராதாகிருஷ்ண ராவ் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் கடந்த 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, அரசு வாகனங்களில் பணம் எடுத்து செல்லப்பட்டதாகவும், இந்த தேர்தல் நடத்தை விதி மீறலில், பிரனீத் ராவ், புஜங்க ராவ், திருபதன்னா மற்றும் வேணுகோபால் ராவ் ஆகிய அதிகாரிகள் அப்போதைய உளவுத்துறை தலைமை அதிகாரி பிரபாகர் ராவ்வுடன் இணைந்து ஈடுபட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக ரிமாண்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரபாகர் ராவ் முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள அவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெலுங்கானா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரமும், அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி வரும் திடுக்கிடும் தகவல்களும் தெலுங்கானாவில் பூதாகரமாக வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’ஒரு செங்கலை காட்டி எய்ம்ஸ்-ஐ கொச்சைப்படுத்துகிறார்” : ஜி.கே.வாசன் விமர்சனம்!
ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா