காரைக்கால் – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று புதுச்சேரி பொதுப்பணி, சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் – இலங்கை யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க புதுவை அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டே இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின.
இந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணம் – காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது நடைமுறைப்படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து மூன்று மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம். இது தொடர்பாக புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, காரைக்கால் – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்பட்டதால் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கும்” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு தமிழகம் வந்திருந்த இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான் மற்றும் இலங்கை கிராம அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர், “காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கும்போது நிச்சயமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலாத்துறை, சமய நிகழ்வுகள், மருத்துவத் துறை உள்ளிட்ட உறவுகள் மேம்படும்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
அரசுப் போக்குவரத்து தனியார் மயமாவது உறுதி: டிடிவி தினகரன்
வடமாநிலத்தவர் விவகாரம்: முன்ஜாமீன் கேட்கும் பாஜக நிர்வாகி!