நீதிபதி சேகர் குமார் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்திடம் இருந்து உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 10) விளக்கம் கேட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் அலகாபாத் நீதிமன்றத்தின் நீதிபதி சேகர் குமார் யாதவ் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி விஷ்வ இந்து பரிஷத் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பொது சிவில் சட்டம் தலைப்பில் அவர் பேசுகையில் “ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை கல்யாணம் செய்துகொள்வது, முத்தலாக் சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் இனி செல்லுபடியாகாது” என்றார்.
மேலும் நாங்கள் (இந்துகள்) எங்கள் குழந்தைகளுக்கு அன்பு, சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றை போதிக்கிறோம். விலங்குகள், இயற்கையை நேசிக்க கற்றுத்தருகிறோம். மற்றவர்களின் வலியை நாங்கள் உணர்கிறோம்.
ஆனால் நீங்கள் (முஸ்லிம்கள்) அப்படி இல்லை. ஏன்? உங்கள் குழந்தைகள் கண் முன்னால் நீங்கள் விலங்குகளை வெட்டினால், எப்படி அவர்கள் அன்பு, சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றைக் கற்றுக்கொள்வார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து “இந்த நாடு பெரும்பான்மையின் விருப்பத்தின் படிதான் இயங்கும். பொது சிவில் சட்டத்தை ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத், இந்துக்கள் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றமும் இதை ஆதரிக்கிறது” என்று நீதிபதி சேகர் குமார் கூறினார்.
அவர் பேசிய இந்த நிகழ்ச்சியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.
மேலும், “நீதிபதி ஷேகர் குமார் யாதவின் பேச்சு வெறுப்பு பிரச்சாரம் போல் இருக்கிறது. உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும் ” என்று அக்கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் நேற்று (டிசம்பர் 9) வலியுறுத்தியிருந்தது.
இதற்கிடையில் இந்திய வழக்கறிஞர் சங்கம் இது தொடர்பாக நேற்று காலை ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும், இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கும் கடிதம் எழுதியது.
அதில் “விஷ்வ இந்து பரிஷத் கூட்டத்தில் நீதிபதி சேகர் குமார் பேசியது இந்திய அரசியலமைப்பு, மதச்சார்பின்மை, நீதி துறையின் சுதந்திரத்திற்கு எதிரானது. அவரது பேச்சு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கு ஒத்து இருக்கிறது. அதனால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கேம்பெயின் ஃபார் ஜுடிஷியல் அக்கவுண்டபிலிட்டி அண்ட் ரிஃபார்ம் (Campaign for Judicial Accountability and Reforms) அமைப்பின் நிறுவனரும், உச்சநீதிமன்ற நீதிபதி பிரசாந்த் பூஷண் தனது அமைப்பு சார்பாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு இன்று (டிசம்பர் 10) எழுதிய கடிதத்தில்,
“சேகர் குமார் யாதவ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மன்னிக்க முடியாத மற்றும் மனசாட்சியற்ற அவதூறுகளைப் பேசியுள்ளார்.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியின் உயர் பதவிக்கும், ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் அவமானத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளார்.
நீதித்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப் படவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய நிகழ்வில் நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசியது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்திடம் இருந்து உச்ச நீதிமன்றம் இன்று விளக்கம் கேட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
25 Years of Bala : தமிழ் சினிமாவின் இன்னொரு முகத்தை காட்டிய பாலா
ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் : வானிலை மையம் எச்சரிக்கை!