பாகிஸ்தான் ரயில் கடத்தல்… நள்ளிரவில் 80 பணயக் கைதிகள் மீட்கப்பட்டது எப்படி?

Published On:

| By Selvam

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய பலூச் கிளர்ச்சி படையினரிடமிருந்து 80 பணயக் கைதிகளை பத்திரமாக மீட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. Shehbaz Sharif condemns attack

பாகிஸ்தான் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் நேற்று (மார்ச் 11) சென்று கொண்டிருந்தது.

இந்த ரயிலானது போலான் மாவட்டம் அருகே வந்துகொண்டிருந்தபோது, பாகிஸ்தான் அரசிடம் இருந்து பலூசிஸ்தான் விடுதலையைக் கோரி வரும் பலூச் விடுதலை படை (BLA) ரயிலை கடத்தி பயணிகளை பணயக் கைதிகளாக சிறை பிடித்தது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட கிளர்ச்சிப் படை, “பாகிஸ்தான் ராணுவ படைகள் நடவடிக்கை எடுத்தால் பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள். ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட பலூச் விடுதலை படை போராளிகள், ஆதரவாளர்களை 48 மணி நேரத்திற்குள் விடுவிக்காவிட்டால் பணயக்கைதிகள் அனைவரையும் தூக்கிலிடுவோம்” என்றும் எச்சரித்தது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் ராணுவம், “பயங்கரவாதிகளிடமிருந்து 43 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உட்பட 80 பணயக்கைதிகளை பாதுகாப்புப் படையினர் நேற்று இரவு விடுவித்துள்ளனர்.

13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. மீதமுள்ள பயணிகளை பாதுகாப்பாக மீட்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். கடைசி பயங்கரவாதி அழிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும்” என்று தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாய் திறக்காததது ஏன் என்று பாஜக எம்.பி-க்கள் பிரிஜ் லால், குலாம் அலி கட்டானா உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்தநிலையில், பலூச் கிளர்ச்சி படை தாக்குதலுக்கு ஷாபாஸ் ஷெரீஃப் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்த இழிவான தாக்குதலை நடத்திய கோழைத்தனமான பயங்கரவாதிகள் எந்த கருணைக்கும் தகுதியற்றவர்கள். அவர்கள் பாகிஸ்தானின் முன்னேற்றத்திற்கும் பலூசிஸ்தான் மக்களுக்கும் எதிரிகள்.

புனித ரமலான் மாதத்தில் நடந்த இந்த தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு இஸ்லாம், பாகிஸ்தான், பலூசிஸ்தான் ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.

பயங்கரவாதம் முற்றிலுமாக நமது நிலத்திலிருந்து அழிக்கப்படும் வரை அதற்கு எதிரான போராட்டத்தைத் தொடருவோம். பாகிஸ்தானில் அமைதியின்மை மற்றும் குழப்பத்தை பரப்புவதற்கான ஒவ்வொரு சதித்திட்டமும் முறியடிக்கப்படும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் பாதுகாப்புப் படையினருடன் நாடு ஒற்றுமையாக நிற்கும். எதிரிகளின் தீய செயல்கள் ஒருபோதும் வெற்றிபெறாது. பாகிஸ்தானின் இறையாண்மையையும் அமைதியையும் பாதுகாப்பதற்காக இந்த சவாலான நேரத்தில் முழு தேசமும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாக உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். Shehbaz Sharif condemns attack

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share