வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 8 புள்ளிகள் சரிந்து 75,410.39 புள்ளியிலும். தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து 22,957 புள்ளியிலும் முடிவடைந்தது.
இன்று ( மே 25) சனிக் கிழமை என்பதால் பங்குச் சந்தை விடுமுறை
வார கடைசி வர்த்தக முடிவில் எச்டிஎஃப்சி வங்கி, எல்&டி, பார்தி ஏர்டெல், பிபிசிஎல், ஆக்ஸிஸ் வங்கி என்டிபிசி, மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் அதிக லாபத்தை கொடுத்தன.
அதானி போர்ட், டாடா கன்ஸ்யூமர், டெக் மகேந்திரா, ஐடிசி, ஏசியன் பெயிண்ட், டைடன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
துறை வாரியாக பார்க்கையில் பேங்க் நிஃப்டி , ஆட்டோமொபைல், மீடியா, ஆயில் & கேஸ் துறை பங்குகள் உயர்வுடனும் ,நிஃப்டி எஃப்எம்சிஜி, மெட்டல், பார்மா, ரியால்டி துறை பங்குகள் சரிவுடனும் முடிவடைந்தன.
அதானி எண்டர்பிரைசஸ் பங்கு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 2% உயர்ந்து புதிய 52 வாரங்களில் உச்சத்தை எட்டி 3,455 ரூபாய் வரை சென்றது.
ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை காரணமாக எண்டர்பிரைசஸ் பங்கு கடந்த 2023 பிப்ரவரி 3ம் தேதி 52 வார குறைந்தபட்ச விலையான 1,017.45க்கு சரிந்தது குறிப்பிடத்தக்கது.
அதானி என்டெர்பிரைசஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு கடந்த 16 மாத வர்த்தகத்தை ஒப்பிடுகையில் 300% லாபமும் கடந்த 2 வாரங்களில் 23% லாபமும் கொடுத்துள்ளது. அதேநேரத்தில் வெள்ளிக்கிழமை காலை அதானி போர்ட்ஸ் பங்குகள் 2% வரை சரிவை கண்டது.
இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் மார்ச் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 21 சதவீதம் உயர்ந்து 319 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
Torrent Pharmaceuticals Ltd நிறுவனம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபத்தை விட 56.45% நிகர லாபம் உயர்ந்து 449 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
சுஸ்லான் எனர்ஜி Q4 முடிவுகள் அடிப்படையில் அதன் நிகர லாபம் 21% குறைந்து 254 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 320 கோடியை நிகர லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
கொச்சின் ஷிப்யார்ட் Q4ல் நிகர லாபம் பல மடங்கு உயர்ந்து 259 கோடியாக உள்ளதாகவும் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் 39.33 கோடியை லாபமாக ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
மணப்புரம் ஃபைனான்ஸ் Q4ல் நிகர லாபமாக 562 கோடியை ஈட்டியதாகவும், ஒரு பங்கிற்கு 1 ரூபாய்க்கு ஈவுத்தொகை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனம் Q4 காலத்தில் 900 கோடியை லாபமாக ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
Voltamp Transformers நிறுவனம் உலக அளவிலான மின்மாற்றிகளின் வடிவமைப்பு, உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும். கடந்த 2023 பிப்ரவரி மாதம் இந்நிறுவனத்தின் பங்கு 2518 ரூபாய்க்கு வர்த்தகமான நிலையில் கடந்த 16 மாத காலத்தில் ஒரு பங்கின் விலை 11,970 வரை உயர்ந்து 375% லாபத்தை கொடுத்து இதன் முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதேநேரத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மூன்று ஆண்டுகளில் 923% லாபமும், ஐந்து ஆண்டுகளில் 1079% லாபமும். கடந்த 11 ஆண்டுகளில் 2918% வருமானத்தை அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மே 17 ஆம் தேதியுடன் புதிய உச்சமாக $648.7 பில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து 83.11ஆக உள்ளது.
இன்று மக்களவைத் தேர்தலின் 6 ஆம் கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது. இன்றைய வாக்குப் பதிவு சதவிகிதம் எவ்வளவு என்பது உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து மே 27 ஆம் தேதியன்றைய வர்த்தக நிலவரம் இருக்கும்!
–மணியன் கலியமூர்த்தி
+1
1
+1
2
+1
+1
1
+1
+1
+1
1