ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3 வது முறையாக பதவி ஏற்றதன் காரணமாக, நேற்று (ஜூன் 10) திங்கள்கிழமை வர்த்தகத்தில் இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் 77 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்துடன் காலையில் தொடங்கின.
ஆனாலும், உலக அளவிலான சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 203.28 புள்ளிகள் சரிந்து 76,490.08 புள்ளியிலும், நிஃப்டி 30 புள்ளிகள் குறைந்து 23,259.20 புள்ளியிலும் முடிவடைந்தது.
தகவல் தொழில்நுட்பம், உலோகம், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகள் நஷ்டத்தில் முடிவடைந்தன. மீடியா இன்டெக்ஸ், ஃபார்மா மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பங்குகள் உயர்ந்தன.
அமெரிக்க ஃபெடரல் வட்டி குறைப்பு, அமெரிக்க வேலைவாய்ப்பு விகித சரிவு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து 83.50 ஆக சரிந்த நிலையில் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) இல் தங்கத்தின் விலை கடந்த 20 நாட்களில் 3,400 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் தங்கம் 10 கிராம் 71,012 ஆக முடிவடைந்தது..
ஜூன் 10ம் தேதி திங்கட்கிழமை வர்த்தகத்தில் NSEல் அல்ட்ரா டெக், கிராசிம் இன்டர்சீஸ், ஹுரோ மோட்டார் கார்ப், சிப்லா மற்றும் பவர் கிர்டு கார்பொரேஷன் பங்குகள் அதிகலாபத்தையும் டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், விப்ரோ, மகிந்த்ரா அண்டு மஹிந்திரா மற்றும் LTI Mindtree பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
முறையே BSEல் அல்ட்ரா டெக், பவர் கிர்டு, நெஸ்லே இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, என்டிபிசி பங்குகள் லாபத்தையும், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், விப்ரோ, மகிந்த்ரா அண்டு மஹிந்திரா மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் நட்டத்தையும் சந்தித்தன.
பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 கோடி சிமெண்ட் வீடுகள் கட்டித் தரப்படும் என்கிற மத்திய அரசின் திட்டம் செயல்படுத்த உள்ளதன் காரணமாக அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட், கேசிபி லிமிடெட், ராம்கோ சிமெண்ட் லிமிடெட் போன்ற சிமென்ட் பங்குகள், இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் உள்ளிட்ட குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த சிமெண்ட் நிறுவன பங்குகள் திங்கள்கிழமை வர்த்தகத்தில் 3% முதல் 5% வரை லாபத்துடன் முடிந்தன.
தி ஓபராய் ஹோட்டல்களின் முதன்மை நிறுவனமான EIH அசோசியேட்டட் ஹோட்டல் பங்கு திங்களன்று BSEல் 17 சதவீதம் லாபத்தைக் கொடுத்து 52 வார உச்சத்தை அடைந்து 845 ரூபாய் வரை உயர்ந்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1500 kta ஈத்தேன் திட்டத்தை செயல்படுத்த அரசு ஒப்பந்தத்தில் பங்கு கொண்ட நிலையில் GAIL நிறுவனத்தின் பங்கு திங்கள்கிழமை வர்த்தகத்தில் 1.73% சரிந்தது.
குஜராத் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடெட், மூலதன வெளியீட்டின் மூலம் நிதி திரட்டவும், அதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் நேற்று இந்நிறுவன பங்கு BSEல் 0.67% சரிந்து 14.87 ரூபாயில் முடிவடைந்தது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உள்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள நிலைத்தன்மை மற்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வளர்ச்சி விகிதம் அடிப்படையில் வரும் வாரங்களில் கீழ்க்கண்ட பங்குகள் 6 முதல் 15 சதவீத லாபத்தைக் கொடுக்க உள்ளதாக பங்குச் சந்தை தரகர்கள் பரிந்துரை செய்கின்றனர்.!
அதன்படி டெக் மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி, டாடா மோட்டார்ஸ், & லார்சன் & டோப்ரோ, ரேமண்ட், Eris Life Sciences, UPL, தேவிஸ் லேபாரட்டரீஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் இடம்பெற்றுள்ளன.
உலகலாவிய பங்குச் சந்தை குறியீடுகள் வீழ்ச்சி காரணமாக இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகள் சரிவுடன் தொடங்கியது.
சென்செக்ஸ் 33 புள்ளிகளும் நிஃப்டி 14 புள்ளிகளும் சரிவுடன் தொடங்கியது.
ஜூன் 11ம் தேதி செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஹூரோ மோட்டார் கார்ப், அல்ட்ரா டெக் சிமெண்ட், சிப்லா, வோடபோன் மற்றும் ஆர்விஎன்எல் நிறுவன பங்குகள் லாபத்தைக் கொடுக்கும் என்று கணிக்கின்றனர்.
நேற்று பங்குச் சந்தை முடிவுக்கு பிறகு இன்டிகோ நிறுவனத்தின் பங்குதாரர் சுமார் 3500 கோடி மதிப்பிலான பங்குகளை Block Deal வர்த்தகத்தில் விற்பனை செய்துள்ளதாக வந்துள்ள செய்திகள் காரணமாக இன்று இந்நிறுவனத்தின் பங்குகள் கவனம் பெற்றுள்ளது.
-மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தருமபுரம் ஆதீனம் மிரட்டல் வழக்கு : தலைமறைவான உதவியாளர் கைது!
பயன்பாட்டுக்கு வந்த திருச்சி புதிய விமான முனையம் : விமானத்திற்கு வாட்டர் சல்யூட்!
பியூட்டி டிப்ஸ்: நரையைப் போக்கும் ஹோம்மேடு ஹென்னா பேக்!
டாப் 10 செய்திகள் : நீட் தேர்வு குளறுபடி விசாரணை முதல் ஒடிசா முதல்வர் தேர்வு வரை!