அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு வட்டி விகிதங்களை குறைக்க உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய, ஜப்பான், ஹாங்காங் மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் நேற்று (மே 31) வெள்ளிக்கிழமை சற்றே ஏற்றம் கண்டன.
அதே நேரத்தில் சீன பங்குச் சந்தை சரிவை சந்தித்தது.
இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகள் வெள்ளிக்கிழமை காலை கடும் சரிவுடன் தொடங்கிய நிலையில், உலகலாவிய சந்தை முன்னேற்றம் காரணமாக கடந்த 5 நாட்களுக்கு பிறகு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 75.71 புள்ளிகள் உயர்ந்து 73961.31 புள்ளியிலும், நிஃப்டி 66.95 புள்ளிகள் உயர்ந்து 22555.6 புள்ளியிலும் முடிவடைந்தது.
வார இறுதி நாள் வர்த்தகத்தில் BSEல் டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், எல்&டி, இந்தஸ்இந்த் வங்கி, பவர்கிர்டு கார்பொரேஷன் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும். நெஸ்லே இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீஸ், மாருதி சுசூகி இந்தியா, இன்ஃபோசிஸ், மற்றும் டெக் மகேந்திரா பங்குகள் சரிவுடனும் முடித்தன.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
முறையே ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதாரம் 8.2 சதவீதமும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் 8.1 சதவீதமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் 8.6 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.
2023-24 நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக உயர்ந்து வளர்ச்சியை கண்டுள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
NSEல் அதானி என்டெர்பிரைசஸ், அதானி போர்ட், ஸ்ரீராம் பைனான்ஸ் கோல் இந்தியா டாட்டா ஸ்டீல் நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், தேவிஸ் லேபாரட்டரீஸ் ,நெஸ்ட்லே இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாக்டர் ரெட்டி லேபரிட்டிஸ்,எல்.டி.ஐ, மைன் ட்ரீ நிறுவன பங்குகள் விலை குறைந்தும் முடிந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் மெட்டல்,பவர், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தது.
முறையே ஹெல்த் கேர், தகவல் தொழில்நுட்ப துறை நிறுவன பங்குகள் 0.5 % வரை சரிவை சந்தித்தன.
வெள்ளிக்கிழமை NSE வர்த்தகத்தில் டெக்னோ எலக்ட்ரிக், அதானி பவர், ஃபோர்டீஸ் ஹெல்த் கேர் உள்ளிட்ட 27 நிறுவன பங்குகள் 52 வார உச்சத்தை அடைந்தன. ராய்ட் மொபைல், ராம்கோ சிமெண்ட், ஷீலா ஃபோம் உள்ளிட்ட 7 நிறுவனங்களின் பங்குகள் 52 வார குறைந்த விலையை அடைந்தன.
இந்த வார தொடக்கத்தில் அதானி எண்டர்பிரைசஸ் வாரியம் கியூஐபி) மூலமாக ரூ. 16,600 கோடி நிதி திரட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது, அதே நேரத்தில் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸின் இயக்குநர்கள் கூட்டத்தில் QIP மூலமாக 12,500 கோடி திரட்ட ஒப்புதல் அளித்துள்ள செய்திகள் வெளியான நிலையில், வெள்ளிக்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் 14 சதவீதம் வரை உயர்ந்தன.
முறையே அதானி என்டெர்பிரைசஸ் பங்கு 7%, அதானி பவர் பங்கு 14%, அதானி டோட்டல் கேஸ் பங்கு 9%, அதானி வில்மார் 3%, அதானி கிரீன் எனர்ஜி அதானி ட்ரான்ஸ்மிஷன் முறையே 2%, அதானி நிறுவனம் புதிதாக கையகப்படுத்திய நிறுவளங்களான என்டிடிவி 8%, அம்புஜா சிமெண்ட் மற்றும் ACC பங்குகள் 2% வரை உயர்ந்தது.
மே 30 வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) சுமார் 43,827 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகள் விற்று வெளியேறி உள்ளனர்.
ஜனவரி முதல் மே வரையான 5 மாத காலத்தில் இதுவரை 1.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.
இந்தியாவின் மிகப் பழமையான, மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம்; தகவல் தொழில்நுட்பம், இரும்பு, மின்சாரம், ஓட்டல்,ஆட்டோமொபைல் என 25 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகமாகி வருகிறது.
இந்நிலையில் மேற்கண்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மூலமாக 23-24 நிதியாண்டில் வரிக்குப் பிந்தைய லாபமாக 85,510 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா,Oil & Natural Gas Corporation,Coal India, லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட BSEல் பட்டியலிடப்பட்ட 56 பொதுத்துறை நிறுவனங்கள் 23-24 நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக 5.07 லட்சம் கோடியை ஈட்டியதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனங்கள் ஈட்டிய 3.43 லட்சம் கோடியை கணக்கிடுகையில் இது உச்சபட்ச வளர்ச்சி என்று பங்குச்சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
2024-25 நிதியாண்டில் (Additional Tier I / Tier II Bonds) பத்திரங்கள் மூலமாக 8,500 கோடி திரட்டுவதற்கு அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து, கனரா வங்கியின் பங்கு வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 4% உயர்ந்தது.
கனரா வங்கியின் துணை நிறுவனமான கனரா எச்எஸ்பிசி ஆயுள் காப்பீடு நிறுவனம் பங்குச் சந்தையில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜூன் 1 சனிக்கிழமை பங்கு சந்தை விடுமுறை.
வருகிற வாரத்தில் குறுகிய கால வர்த்தகத்திற்கு ஏற்ற பங்குகள் பட்டியலில் என்டிபிடி, எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், டெக்ரயில், ஜிஎம்ஆர் ஏர்போர்ட் நிறுவன பங்குகள் உள்ளன.
மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட் ரத்து : ஆனால்…
வேலைவாய்ப்பு : போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணி!