ஜூலை 04 வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்த சந்தை வர்த்தக முடிவில் பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.6 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 63 புள்ளிகள் உயர்ந்து 80,050 புள்ளியிலும், நிஃப்டி 16 புள்ளிகள் அதிகரித்து 24,302 புள்ளிகள் என்கிற புதிய உச்சத்துடன் முடிவடைந்தது.
டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், கோடக் வங்கி, எம்&எம், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சென்செக்ஸில் அதிக லாபத்தை கொடுத்தன.
எச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மகிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட், எல் அண்ட் டி மற்றும் டைட்டன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.2 சதவீதம் வரை சரிவை சரிந்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா உயர்ந்து 83.50/$ இல் முடிவடைந்தது.
ஜூலை 3 புதன்கிழமை வெளியிடப்பட்ட அமெரிக்க பொருளாதார மந்தநிலை தரவுகள் காரணமாக ஜூலை 4 வியாழன் அன்று கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலை சற்று குறைந்தது.
அதானி குழுமம் மற்றும் பிற நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நிலக்கரி இறக்குமதி ஊழல் தொடர்பாக தமிழ்நாடு அரசு முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டிவிஏசி) டெண்டர் நிபந்தனைகள் மற்றும் நிலக்கரி இறக்குமதியில் முறைகேடுகள் மற்றும் மாநிலத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வரும் நிலையில், நேற்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
அதானி போர்ட் 1.11%,ஏசிசி சிமெண்ட் 3%, அதானி என்டெர்பிரைசஸ் 1.5% அதானி கிரீன் 0.45%, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 0.62%, அதானி டோட்டல் கேஸ் 0.53% மற்றும் அதானி வில்மர் 0.46% என அதானி குழும நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.
இந்த வார தொடக்கத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக தகவல்களைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, ஹிண்டன்பர்க் ரிசர்ச், மார்க் கிங்டன் மற்றும் சில நிறுவனங்களுக்கு பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
Lupin நிறுவன பங்குக வியாழக்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில் 7 சதவீதம் உயர்ந்து உச்சபட்சமாக பங்கு ஒன்று 1,749 ரூபாயை எட்டியது.
கொச்சி ஷிப் யார்டு பங்கு 52 வார புதிய உச்சத்தை அடைந்து 2,679.95 ஆக உயர்ந்தது.
GE பவர் இந்தியா நிறுவனத்தின் பங்கு வியாழக்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் 18 சதவீதம் உயர்ந்து அதிகபட்சமாக பங்கு ஒன்று 483.15 ரூபாயை எட்டியது.
தனியார் வங்கியான பந்தன் வங்கியின் பங்கு 1.75 சதவீதம் வரை உயர்ந்து பங்கு ஒன்றுக்கு 214.65 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
HDFC வங்கியின் டெபாசிட் அளவு ஜூன் 30 2024 நிலவரப்படி 23.8 லட்சம் கோடியை எட்டியதாகவும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய 19.13 லட்சம் கோடியை கணக்கிடுகையில் இது 24.4% வளர்ச்சி என்று தெரிவித்துள்ளது. எனினும் நேற்றைய வர்த்தகத்தில் HDFC வங்கி லிமிடெட் பங்கு பிஎஸ்இயில் 41.75 ரூபாய் குறைந்து 1,726.60 ஆக முடிந்தது.
பொதுத்துறை வங்கி UCO வங்கி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. முதல் காலாண்டில் மொத்த வர்த்தகம் 4.62 லட்சம் கோடியை எட்டியதாகவும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய இது 4.14 லட்சம் கோடியை ஒப்பிடுகையில் இது 11.5% வளர்ச்சி என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் UCO வங்கியின் பங்கு பிஎஸ்இயில் 0.48% குறைந்து 53.90 ரூபாயில் முடிந்தது.
ஜவுளி மற்றும் துணி உற்பத்தியில் முண்ணனி நிறுவனமான ரேமண்ட் லிமிடெட் (RL) வியாழனன்று தனது நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையை அறிவித்தது, அதன்படி ரியல் எஸ்டேட் துறையில் உள்ள இதன் துணை நிறுவனமான ரேமண்ட் ரியால்டி லிமிடெட் நிறுவனத்தை தாய் நிறுவனத்திடம் இருந்து பிரிக்க இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது.
அதன்படி ரேமண்ட் லிமிடெட் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு ரேமண்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு ஈக்விட்டி பங்கிற்கும் ரேமண்ட் ரியாலிட்டியின் ஒரு பங்குப் பங்கைப் பெறுவார்கள் எனவும். ரேமண்ட் ரியாலிட்டி பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயில் பட்டியலிடப்படும் என்று தெரிவித்துள்ளது அந்நிறுவனம். இதன் காரணமாக நேற்று வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரேமண்ட் லிமிடெட் பங்குகள் பிஎஸ்இயில் 26.30 ரூபாய் குறைந்து பங்கு ஒன்று 2,935.45 ரூபாயில் முடிந்தது.
ஜூலை 5 வெள்ளிக் கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி காலை முதல் அமர்வில் சரிவுடன் தொடங்கியது. முறையே நிஃப்டி 5 109 புள்ளிகள் சரிந்து 24,193.2 ஆகவும், சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் சரிவு கண்டு வர்த்தகம் ஆகி வருகிறது.
காலை வர்த்தகத்தில் எச்டிஎஃப்சி வங்கி, டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. டிவிஸ் லேப் , சிப்லா மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வருகிறது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் முதல் காலாண்டு வர்த்தக முடிவை இன்று அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபத்தை விட இந்த ஆண்டு தோராயமாக 27% வருவாய் வளர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளது.
வார இறுதி வர்த்தக நாள் வெள்ளிக்கிழமை இன்று Raymond, Mahindra Lifespace, UCO Bank, CG Power மற்றும் நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்த வேண்டிய பங்குகள் என்று பங்குச் சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மணியன் கலியமூர்த்தி
பாம்பன் கோவில் குடமுழுக்கு: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
’கவுண்டம்பாளையம்’ ரிலீஸ் தள்ளிவைப்பு : நடிகர் ரஞ்சித் வேதனையுடன் புகார்!