உலகளாவிய பங்குச் சந்தையில் சாதகமற்ற சூழல் நிலவினாலும் ரிசர்வ் வங்கியின் 7.2% வளர்ச்சி கணிப்பு பற்றிய அறிக்கை மற்றும் 5G ஏல நடவடிக்கைகளைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 26) இந்திய பங்குச் சந்தை பென்ச்மார்க் குறியீடுகள் சென்செக்ஸ் 518. 91 புள்ளிகள் உயர்ந்து 78,572.43புள்ளியிலும் நிஃப்டி 120.60புள்ளிகள் உயர்ந்து 23,868.80 புள்ளியைக் கடந்து முடிவடைந்தது .
மதியம் 2மணி அளவில் சென்செக்ஸ் 78,700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை மற்றும் புதிய உச்சத்தை எட்டியது.
NSEல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (4.26%), பார்தி ஏர்டெல் (3.42%), அல்ட்ராடெக் சிமெண்ட் (2.77%), ஐசிஐசிஐ வங்கி (1.81%), கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் (1.41%) பங்குகள் அதிக லாபத்தை கொடுத்தன. அப்பல்லோ மருத்துவமனைகள் (-2.50%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (-2.21%), பஜாஜ் ஆட்டோ (-1.89%) டாடா ஸ்டீல் (-1.82%), ஹிண்டால்கோ (-1.55) நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.
உலகளாவிய நாணய சந்தையில் அமெரிக்க நாணயத்தின் மதிப்பு உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் சரிந்து 83.60 ஆக இருந்தது.
5G மொபைல் போன்களுக்கான குரல் மற்றும் டேட்டா சிக்னல்களைக் கொண்டு செல்லும் ரேடியோ அலைகளின் சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் 5 கட்ட ஏலம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரண்டாவது நாளான புதன்கிழமை (ஜூன் 26) வரை சுமார் 11,340 கோடி மதிப்பிலான ஏல ஒப்பந்தங்கள் மட்டுமே வந்துள்ளதாகவும், அரசாங்கம் மதிப்பிட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பான ரூ.96,238 கோடியை கணக்கிடுகையில் 12 சதவீதத்திற்கும் குறைவாகவே கிடைத்ததாக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தரப்பில் கூறப்படுகின்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டு 7 நாட்கள் நடந்த ஏலத்தில் 1.5 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5ஜி டெலிகாம் ஸ்பெக்ட்ரம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அந்த ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ஜியோ சுமார் 88,078 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
வேதாந்தா நிறுவனத்தின் புரமோட்டர் நிறுவனமான Finsider International Company தன்னிடம் இருந்த சுமார் 4,184 கோடி மதிப்பிலான வேதாந்தா நிறுவனத்தின் 2.63% ஒட்டுமொத்த பங்குகளையும் விற்பனை செய்து வெளியேறி உள்ளது.
இதன் காரணமாக நேற்று புதன்கிழமை வர்த்தகத்தில் வேதாந்தா நிறுவனத்தின் பங்கு 6.5% வரை சரிந்து 442 ரூபாயில் முடிவடைந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்த பங்கு 2.6 % வரை சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (IREDA) பங்கு புதன்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் பிஎஸ்இயில் 7.7% உயரந்து ஒரு பங்கு 199.35 ஆக வர்த்தகம் ஆனது. மற்றொரு பொதுத்துறை நிறுவனமான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம் (HUDCO) நிறுவனத்தின் பங்கு பிஎஸ்இயில் 4.7 சதவீதம் உயர்ந்து 288.15 ரூபாய் வரை உயர்ந்தது.
2024 நிதியாண்டில் 13 ரூபாய் டிவிடெண்ட் வழங்க உள்ளதாக HAL போர்டு அறிவித்துள்ளது.
மேக்னா இன்ஃப்ராகான் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் பங்கு புதன்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் பிஎஸ்இயில் ஒரு பங்கிற்கு 268 ஆக உயர்ந்து 52 வார உச்சத்தை எட்டியது. ஒரே நாளில் இந்த பங்கு 19 சதவீதம் வரை லாபத்தைக் கொடுத்தது.
ஐடிடி சிமென்டேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனம் வரிகள் உட்பட ரூ.1,082 கோடி மதிப்பிலான கடல்சார் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் நேற்று பிற்பகல் 3.20 நிலவரப்படி இதன் பங்கு 3.73 சதவீதம் உயர்ந்து 52 வாரங்களில் அதிகபட்சமாக 529.85 ஆக ஏறியது.
ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ் வாரியம் preferential வெளியீடு மூலம் 1,050 கோடி திரட்ட ஒப்புதல் அளித்ததாக அறிவித்த நிலையில் நேற்று புதன்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு விலை 1.36% வரை சரிந்து ஒரு பங்கின் விலை 169.54 ரூபாய் வரை குறைந்தது.
தர்னி கேபிடல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் தனாயு ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 6.11 கோடி மதிப்பிலான 49.28% பங்குகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் பிஎஸ்இயில் இந்நிறுவனத்தின் பங்கு 4.44% அதிகரித்து 47 ரூபாய் வரை உயர்ந்தது.
பாரத ஸ்டேட் வங்கி அதன் ஐந்தாவது Infrastructure பத்திர வெளியீட்டின் மூலம் 10,000 கோடி திரட்ட அறிவித்திருந்த நிலையில், வெளியிடப்பட்ட பத்திரத்தின் மதிப்பை விட 4 மடங்கு நிதி திரட்டியதாகவும், பாரத ஸ்டேட் வங்கியின் வீட்டுக் கடன் திட்டத்திற்காக இந்நிதி மூலதனம் பயன்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை வர்த்தகத்தில் SBI பங்கு 0.59% உயரந்து 846.45 ரூபாயில் முடிவடைந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் துணை நிறுவனம் பிரேசிலில் உள்ள மனாஸில் உள்ள அதன் புதிய உற்பத்தி ஆலையில் வணிகரீதியான உற்பத்தியைத் தொடங்கியதாக தெரிவித்துள்ளது.
ஜூன் 27 வியாழக்கிழமை இன்று காலை ஆசிய சந்தைகள் ஜப்பானின் நிக்கேய் 225 புள்ளிகள் குறைந்தது,தென் கொரியாவின் கோஸ்பி 0.69 சதவீதம் சரிந்தது.
ஹாங்காங்கின் ஹாங் செங் Future 1.22 சதவீதம் குறைந்தாலும், வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 119.72 புள்ளிகள் சரிந்து 78,554.53 ஆகவும், நிஃப்டி 26.25 புள்ளிகள் சரிந்து 23,832.55 ஆகவும் தொடங்கிய சில நிமிடங்களில்
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் தொடங்கியது.
பல்வேறு செய்திகள் காரணமாக AU Small Finance Bank, Ramky Infrastructure,JSW Energy, Rail Vikas Nigam India, KEC International, SJVN, LTIMindtree, EMS,Cements, PTC India Financial Services,Archean Chemical Industries, ITD Cementation India,DRL, SBI, IIFL, Telecom stocks மற்றும் CSB Bank பங்குகள் இன்று கவனம் செலுத்த வேண்டிய பங்குகள் என்று பங்குச் சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
நடைபெற்று வரும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு மொத்தம் 141.4 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11,340 கோடி ஆகும்.
பார்தி ஏர்டெல் 97 மெகா ஹெர்ட்ஸ், ரிலையன்ஸ் ஜியோ 14.4 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் வோடபோன் ஐடியா 30 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வாங்கியுள்ள நிலையில் இன்றைய வர்த்தகத்தில் இந்த நிறுவனங்களில் பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படும். இன்று (ஜூன் 27) காலை முதல் அமர்வில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள் 10% லாபம் ஈட்டியது.
– மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருமணமான பெண்களை பணியமர்த்த மறுக்கும் ஃபாக்ஸ்கான்: மத்திய அரசு நோட்டீஸ்
அல்லாள நாயகருக்கு அரசு விழா: கொங்கு அரசியலில் இன்னொரு ஸ்டெப்!