பிரதமர் நரேந்திர மோடி, நாளை (டிசம்பர் 30) 7வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க உள்ளார்.
நாட்டின் 75ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அடுத்த ஆண்டு(2023) ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. முக்கியமாக, வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் ஏற்கெனவே டெல்லி-வாரணாசி, டெல்லி-ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா, குஜராத் – மகாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம்-டெல்லி, சென்னை – மைசூரு என ஐந்து வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 6வது வந்தே பாரத் ரயில், சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் – மகாராஷ்டிராவின் நாக்பூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை பிரதமர் மோடி, கடந்த டிசம்பர் 11ஆம் தேதி நாக்பூரில் தொடங்கிவைத்தார்.
ஒருபுறம் வந்தே பாரத் ரயில் சேவை, மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க, மறுபுறம் அது விபத்தில் சிக்குவதும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்த நிலையில், நாளை (டிசம்பர் 30) மேற்குவங்க மாநிலத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரூ.7,800 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அதன் ஒரு பகுதியாக, ஹவுரா – நியூ ஜகல்பூரி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஹவுரா நகரில் இருந்து ஜகல்பூரி வரை இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அதிகவேகம் செல்லக்கூடிய, பயணிகளுக்கான அதிநவீன வசதிகள் கொண்ட வந்தேபாரத் ரயில் இரு வழித்தடங்களுக்கு இடையே 7.5 மணிநேரம் பயணிக்கும். மால்டா நகரம், பர்சோய், கிசான்கஞ்ச் நகரங்களில் இந்த ரயில் நின்று செல்லும். வாரத்தில் 6 நாட்கள் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்.
ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில், நியூ ஜகல்பூரி பிற்பகல் 1.30 மணிக்கு சென்றடையும். அங்கு ஒரு மணிநேரத்துக்குப் பின், பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10 மணிக்கு ஹவுரா வந்து சேரும்.
ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலை, ஒரு மாதத்தில் 2 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 6வது ரயிலை மேற்கு வங்கத்துக்கும், நாளை இயக்கப்பட உள்ள 7வது ரயிலை ஹவுராவுக்கும் அனுப்பி வைத்துள்ளது, ஐசிஎஃப்.
ஜெ.பிரகாஷ்
உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் இறப்பு: விசாரணையை முடுக்கிய இந்தியா
துணை முதல்வர் உதயநிதி: அன்பில் மகேஷ் குஷி பேச்சு!