சீனியர் சிட்டிசன்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கக் கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய ரயில்வேக்களில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40% ரயில் கட்டண சலுகையும், 58 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு 50% கட்டண சலுகையும் அளிக்கப்பட்டு வந்தது.
கோவிட்-19 தொற்று காலத்தில் இருந்து, மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டு, அது இன்னும் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில், எம்.கே.பாலகிருஷ்ணன் என்பவர் மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க கோரி உத்தரவு பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நேற்று (ஏப்ரல் 29) விசாரித்த எஸ்.கே.கவுல் மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு,
”அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் இந்த மனுவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமாக இருக்காது. மூத்த குடிமக்களின் தேவைகள் மற்றும் நிதி விளைவுகளை மனதில் கொண்டு இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும்’’ எனக் கூறி இம்மனுவைத் தள்ளுபடி செய்தது.
சமீபத்தில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மீண்டும் ஒருமுறை அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
“மதுபானத்தை புரோமோஷன் செய்ய ஏடிஎம் இயந்திரமா?”: கொந்தளித்த அன்புமணி