பாஜக மூத்த தலைவரும் பிகார் முன்னாள் துணை முதல்வருமான சுசில் குமார் மோடி நேற்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 72.
பாஜக மூத்த தலைவரான சுஷில் குமார் மோடி 2005 – 2013 வரை மற்றும் 2017 – 2020 வரை பிகார் துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார்.
எம்எல்ஏ, எம்எல்சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மக்களவைத் தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “ கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறேன். இப்போது மக்களுக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்கிறேன். மக்களவைத் தேர்தலில் என்னால் எதுவும் செய்ய முடியாது. எல்லாவற்றையும் பிரதமரிடம் சொல்லிவிட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (மே 13) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
அவரது மறைவு பாஜகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாஜகவில் இருந்தாலும் பிகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் நெருக்கமாக இருந்தவர் சுஷில் மோடி.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுஷில் மோடி அரசியல் டைம் லைன்!
1952: மோதி லால் மோடி மற்றும் ரத்னா தேவிக்கு ஜனவரி 5, 1952 இல் பிறந்தார்.
1973: பாட்னா அறிவியல் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்சி தாவரவியலில் பட்டம் பெற்றார். பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக ஆனார். அப்போது சங்கத்தின் தலைவராக இருந்தவர் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்.
1974: பிகார் மாணவர் இயக்கத்துக்கு சுஷில் குமார் மோடி தலைமை தாங்கினார்.
1975: எமர்ஜென்சியின் போது, ஜூன் 30 அன்று சுஷில் குமார் மோடி கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
1977-1986: சுஷில் குமார் மோடி ஏபிவிபியில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்தார். அந்த சமயத்தில் பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் இரண்டாவது மொழியாக உருது அறிவிக்கப்பட்டதற்கு எதிராக போராடினார்.
1986: சுஷில் மோடி, ஜெஸ்ஸி ஜார்ஜை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உத்கர்ஷ் ததாகத் மற்றும் அக்ஷய் அமிர்தன்ஷு என இரு மகன்கள் உள்ளனர்.
1990: தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர் பாட்னா மத்திய சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார். பிகார் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைமைக் கொறடா ஆக்கப்பட்டார். அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996-2004: இந்த காலக்கட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். அவர் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட மாட்டுத் தீவன ஊழல் வழக்கை தொடர்ந்த 5 மனுதாரர்களில் இவரும் ஒருவர்.
2000 : நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருந்த சுஷில் மோடி, ஜார்க்கண்ட் மாநிலம் அமைப்பதை ஆதரித்தார்.
2004: பகல்பூர் தொகுதி மக்களவை உறுப்பினரானார்.
2005: பிகாரில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அப்போது பிகார் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக சுஷில் குமார் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.பி பதவியை ராஜினாமா செய்த அவர், பிகார் துணை முதல்வராக பதவியேற்றார். நிதித்துறை அமைச்சராகவும் இருந்தார்.
2010 : மீண்டும் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்ற பிறகு சுஷில் குமார் மோடி துணை முதல்வராக தொடர்ந்தார்.
2017 – ராஷ்டிரிய ஜனதா தளம் – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிவு ஏற்பட்டு, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். இதற்கு சுஷில் குமார் மோடி முக்கிய பங்கு வகித்தார் என்று அப்போது பிகார் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.
2020: முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த பாட்னா சாஹிப் மாநிலங்களவை தொகுதிக்கு சுஷில் மோடி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2024 : கடந்த ஏப்ரல் மாதம் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், தேர்தல் பணிகளில் ஈடுபட முடியாது என்று கூறினார்.
இந்நிலையில் நேற்று தனது 72 வயதில் காலமானார் சுஷில் மோடி. இறுதிச் சடங்குகள் இன்று பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள்: எங்கெல்லாம் நிற்கும்?
செல்லப் பிராணிகளுக்கு லைசென்ஸ்: 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம்!
வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!
ஹெல்த் டிப்ஸ்: பர்கர் பிரியரா நீங்கள்? இதை கவனத்தில் கொள்ளுங்கள்!