நாடாளுமன்றம் தாக்குதல் தொடர்பாக கைதானவர்களிடம் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தாங்கள் தீக்குளிக்க திட்டமிட்டிருந்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மக்களவையில் இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் சம்பவம் நடந்த 13ஆம் தேதி, மனோரஞ்சன், சாகர் ஷர்மா, அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்தது.
தொடர்ந்து மக்களவையில் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 5ஆவது நபராக லலித் ஜா கைது செய்யப்பட்டார். இவர்தான் இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் எனவும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் 6ஆவது நபராக ராஜஸ்தான் மாநிலம் நகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமாவத்தை டெல்லி காவல்துறையினர் இன்று (டிசம்பர் 16) கைது செய்தனர்
இவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
அதன்படி, நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து இதுபோன்று புகை குண்டுகளை வீசுவதற்குப் பதிலாகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேறு சில வழிமுறைகளையும் ஆராய்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
“முதலில் நாடாளுமன்ற வாளாகத்துக்குள் தீக்குளிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் நெருப்பினால் உடலில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஜெல் கிடைக்காததால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டோம்” என்று கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்க திட்டமிட்டிருந்ததாகவும் போலீஸில் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மக்களவை பப்ளிக் கேலரிக்கு செல்ல பாஸ் வழங்கியது தொடர்பாக மைசூரைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய சிறப்புப் பிரிவின் ஒரு குழு திட்டமிட்டுள்ளதாக டெல்லி போலீஸ் கூறுகிறது.