குடியுரிமை சட்டப்பிரிவு 6A செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Published On:

| By Minnambalam Login1

section 6A valid

அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரித்த குடியுரிமைச் சட்டம் 1955, பிரிவு 6A செல்லும் எனத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இன்று(அக்டோபர் 17) தீர்ப்பளித்தது.

வங்கதேசத்து மக்கள் சிலர் 1960 மற்றும் 70 களில் அங்கு நிலவிய போர் சூழலினால், பக்கத்தில் இருக்கும் நமது நாட்டின் வட கிழக்கு மாநிலமான அசாமிற்கு குடிபெயர்ந்தார்கள்.

அப்படி சட்டவிரோதமாக நுழைந்தவர்களால் தங்களது கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது என்றும், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அனைத்து அசாம் மாணவர் ஒன்றியம் மற்றும் அசாம் கன சங்கம் பரிஷத் போன்ற அமைப்பினர் 1970களில் போராட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் இருந்து அசாமிற்குள் வந்த மக்களை வெளியேற்ற வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கையாக இருந்தது.

இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர, இந்திய அரசாங்கம், அசாம் மாநில அரசு, அனைத்து அசாம் மாணவர் ஒன்றியம் மற்றும் அசாம் கன சங்கம் பரிஷத் ஆகியோருடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர 1985 ஆம் வருடம் ஒரு ஒப்பந்தம் செய்தது. இது தான் அசாம் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1995 திருத்தப்பட்டு, பிரிவு 6A  சேர்க்கப்பட்டது.

பிரிவு 6A இன் படி ஜனவரி 1, 1966 – மார்ச் 25, 1971க்கு இடையில் வங்கேதேசத்திலிருந்து(அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) அசாமிற்கு குடியேறிய மக்கள் தங்களை இந்திய குடிமக்களாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில்  கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த பிரிவை எதிர்த்து அசாமைச் சேர்ந்த சன்மிலித மகாசங்க மற்றும் சில அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஹிந்தன் நரிமன் தலைமையிலான 2 பேர் கொண்ட அமர்வு, இதை அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றியது.

இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியலமைப்பு அமர்வில் இருந்து பெரும்பாலான நீதிபதிகள் ஓய்வு பெற்றதால், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இறுதியாகத் தலைமை நீதிபதி சந்திரசூட், ஏ.எஸ்.போபன்னா, எம்.எம்.சுந்தரேஷ், ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா கொண்ட அமர்வு இந்த வழக்கை கடந்த 2023 ஆம் வருடம் டிசம்பர் 5 முதல்  விசாரித்தது.

விசாரணையில், வழக்கை தொடுத்திருந்த அசாம் மாணவர் உள்ளிட்ட அமைப்பினர் ” அசாமை சுற்றி வேலிகள் அமைக்கவும், அசாமில் இருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றவும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அசாம் நிலங்கள் மற்றும் வருவாய் விதிமுறைகளின் படி உருவாக்கப்பட்ட பழங்குடியினருக்கான நிலங்களில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வாதங்களை முன் வைத்தனர்.

இந்த நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் “அசாம் ஒப்பந்தம் சட்டவிரோத குடியேற்றப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வாகும் என்றும், சட்டப்பிரிவு 6A சட்ட ரீதியான தீர்வுதான். ” என்றார்.

மேலும் ஒரு மாநிலத்தில் வெவ்வேறு இனக்குழுக்கள் இருப்பதால், அரசியலமைப்பின் 29(1) வது பிரிவின்படி மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படை உரிமை மீறப்பட்டதாக அர்த்தமில்லை என்றும் நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

அரசியலமைப்பு பிரிவு 29 குறித்து ” குடியேற்றம் காரணமாக அசாமிய கலாச்சாரம் மற்றும் மொழி பாதிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர்களால் நிரூபிக்க முடியவில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்

அதன்படி 4-1 என்ற பெரும்பான்மையின் படி இந்திய குடியுரிமைச் சட்டம் 1995-இன் பிரிவு 6A செல்லும் என்று நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிக் பாஸ் சீசன் 8 : ’என் இடுப்ப தொட்டா ஃபேன்ஸ் கோவிச்சிப்பாங்க!’ – தர்ஷா குப்தா

நெருங்கும் மாநாட்டு தேதி… அரசியல் பயிலரங்கம் நடத்தும் தவெக!

சந்திரசூட் பரிந்துரைத்த அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?