பாலியல் வன்கொடுமை: ஆறு வயது சிறுமியைக் கொன்ற பள்ளியின் முதல்வர்!

Published On:

| By Selvam

School Principal killed six-year-old girl

குஜராத் மாநிலம், தாஹோத் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பள்ளியின் முதல்வர், அந்தச் சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை தாஹோத் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் ஆறு வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது.

ஆனால், யார் இந்த குற்றத்தை செய்தது என்பது தெரியவரவில்லை. எனவே இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது உயிரிழந்த சிறுமி, தினமும் பள்ளிக்கு முதல்வர் கோவிந்த் நாட் உடன் சென்று வந்ததாக சிறுமியின் தாய் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்தபோது, அந்த சிறுமியை பள்ளியில் இறக்கிவிட்டு, வேறு வேலைக்கு சென்றுவிட்டதாக முதல்வர் கூறினார்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸார், சம்பவத்தன்று கோவிந்த் நாட்டின் செல்போன் இருப்பிட விவரங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது சம்பவத்தன்று அவர் பள்ளிக்கு தாமதமாக வந்தது தெரிந்தது. இதனையடுத்து அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது அவர் உண்மை ஒப்புக்கொண்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து பேசியுள்ள மூத்த போலீஸ் அதிகாரி ராஜ்தீப் சிங் ஜாலா,

“பள்ளியின் முதல்வர் காலை 10.20 மணியளவில் சிறுமியை அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியின் தாயார் அவரை முதல்வரின் காரில் ஏற்றிவிட்டார். பள்ளிக்குச் செல்லும் வழியில், முதல்வர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதை எதிர்த்த அந்த சிறுமி கத்த ஆரம்பித்துள்ளார். கத்துவதைத் தடுக்க சிறுமியின் கழுத்தை முதல்வர் நெரித்துள்ளார், இதில் அந்த சிறுமி உயிரிழந்தார்.

பள்ளிக்கு வந்ததும், முதல்வர் சிறுமியின் உடலை காரிலேயே வைத்து வாகனத்தை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மாலை 5 மணியளவில், சிறுமியின் உடலை பள்ளி கட்டடத்தின் பின்னால் வீசிவிட்டு, அவரது பள்ளி பை மற்றும் காலணிகளை வகுப்பறைக்கு வெளியே போட்டுவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 55 வயதான கோவிந்த் நாட் மீது பாரதிய நீதி சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பவம் குறித்து மாநில கல்வி அமைச்சர் குபேர் திண்டோர்,  “சமூகத்திற்கு வெட்கக்கேடான சம்பவம் இது.  இதனால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

போலீஸார் இதை மூன்று நாட்களாக தீவிரமாக விசாரித்து பள்ளி முதல்வரை கைது செய்தனர். இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன், மேலும் இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: நாட்டுக் கதம்ப சாதம்

லிஸ்ட் இன்னும் நெறைய இருக்கு : அப்டேட் குமாரு

இயக்குனர் மோகன் ஜி கைது : தலைவர்கள் ரியாக்சன்!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : எங்கெங்கு மழை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share