ராகுல்காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதி உட்பட 68 குஜராத் நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு உச்சநீதிமன்றம் இன்று (மே 12) தடை விதித்துள்ளது.
குஜராத் உயர்நீதிமன்ற பரிந்துரை மற்றும் மாநில அரசின் அறிவிப்பாணையின் அடிப்படையில் கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் 68 நீதிபதிகள் சமீபத்தில் திடீரென பதவி உயர்வு பெற்றனர்.
அதில் அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மாவும் ஒருவர் என்பதால் பல்வேறு சந்தேகங்களும், சர்ச்சைகளும் எழுந்தன.
இந்நிலையில் மூத்த நீதிபதி ரவிக்குமார் மஹேதா மற்றும் சச்சின் பிரதாப்ராய் மேத்தா ஆகியோர் 68 நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு தேர்வு செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 68 நீதிபதிகளின் பதவி உயர்வு “தகுதி மற்றும் சீனியாரிட்டி கொள்கையை” மீறுவதாகக் கூறிய நீதிமன்ற அமர்வு, நீதிபதிகளின் பதவி உயர்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
மேலும், பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போதே பதவி உயர்வு அளிக்கப்பட்டதால் தடை விதிக்கப்படுகிறது என்றும், நீதிபதிகள் பழைய பதவியே தொடர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா