கேரளாவில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தாக்குதல்களை தடுக்க நிலையான தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஒரு சிலருக்கு தெருநாய்கள் என்றால் அச்சம் இருக்கும். தெருக்களில் நடந்து செல்லும் போது நாய்கள் இருந்தால் அதனைக் கடந்து செல்லும் சிலர், ’நாய் கடித்து விடக் கூடாது’ என்று அதனை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே செல்வார்கள். குறிப்பாக கேரளாவில் பலருக்கும் இந்த பயம் இருக்கும்.
கேரளாவில் தெருநாய்கள் கூட்டாக சேர்ந்து தெருவில் நடந்து செல்பவர்களை விரட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிரப்பட்டு வருகிறது. மேலும் நாய்கள் ஏராளமானவர்களை கடித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி கண்ணூரில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட நிஹல் என்ற 11 வயது சிறுவன் தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில், கண்ணூர் பஞ்சாயத்து… தெருநாய்களை கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று இடைக்கால மனுவை தாக்கல் செய்தது.
அந்த மனுவில், “ஜூன் 11 ஆம் தேதி கண்ணூரில் 11 வயது சிறுவன் நாய் கடித்ததில் உயிரிழந்தார். கடந்த வருடம் கோட்டயம் பகுதியில் 12 வயது சிறுவனும் நாய் கடித்ததில் உயிரிழந்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2019 ஆண்டு 5,794 தெருநாய்கள் தாக்குதல்கள் பதிவாகியுள்ளது.
2020-ல் 3,951 வழக்குகளும், 2021-ல் 7,927 வழக்குகளும், 2022-ல் 11,776 வழக்குகளும், 2023 ஜூன் 19 வரை 6,276 வழக்குகளும் பதிவாகியுள்ளன. எனவே தெருநாய்களை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜே.கே. மகேஸ்வரி மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன்பு நேற்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்தது. கண்ணூர் பஞ்சாயத்து சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. சுரேந்தரநாத் மற்றும் சுபாஷ் சந்திரன் ஆஜராகினர்.
அப்போது, மூத்த வழக்கறிஞர் பி.வி.சுரேந்தரநாத், “தெருநாய்களை கண்மூடித்தனமாக கொலை செய்ய சொல்லவில்லை. வெறிபிடித்த கொடூரமான நாய்களை மட்டுமே அடையாளம் கண்டு அதை கொலை செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
விலங்கு நல ஆர்வலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேனகா குருசாமி, “இந்தப் பிரச்சினை நுட்பமானது. இதனை சட்டரீதியாக ஆய்வு செய்ய வேண்டும். விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள் உள்ளூர் அதிகாரிகளால் செயல்படுத்தப்படவில்லை.
தெருநாய்களை வெறிபிடித்தவை அல்லது ஆபத்தானவை என்று முத்திரை குத்தி கொடூரமாக நடத்தக்கூடாது” என்று ஏற்கனவே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டு நதிகளில் வீசப்பட்டதை மேற்கோள் காட்டினார்.
கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்மோன் ஆண்ட்ரூஸ், தெருநாய்கள் தாக்குதலால் 11 வயது சிறுவன் உயிரிழந்ததை சுட்டிக் காட்டி,
தெருநாய்களால் குழந்தைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் இதனால் கண்ணூர் பகுதியில் 6 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தெருநாய்கள் தாக்குதலுக்கு நிலையான தீர்வு காண வேண்டும் என்று கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மோனிஷா
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த தலைமை செயலாளர்!
ஊரெங்கும் வெள்ளம்… குடிக்க தண்ணியில்ல! விநோத வேதனையில் டெல்லி