mutual consent divorce

விவாகரத்து: 6 மாத காத்திருப்பு தேவையில்லை – உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

இந்தியா

திருமணமான தம்பதிகள் பரஸ்பரம் விவாகரத்து பெற 6 மாத கால காத்திருப்பு தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவில் விவாகரத்து பெற விரும்பும் தம்பதிகள் குடும்ப நல நீதிமன்றங்களை நாடும் போது அவர்களுக்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன.

குறிப்பாக, விவாகரத்து பெற வேண்டுமென்றால் திருமணத்தைப் பதிவு செய்து சரியாக ஒரு வருடம் நிறைவாகியிருக்க வேண்டும். விவாகரத்து பெற விரும்பும் பெண் கணவன் தரப்பில் இருந்து எதிர்பார்க்கும் ஜீவனாம்சம் உள்ளிட்டவை விவாகரத்து வழக்கில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

விவாகரத்து பெற விரும்பும் தம்பதிகளுக்கு தங்களது முடிவைக் குறித்து உறுதியான முடிவெடுக்க இந்து திருமண சட்டம் 13பி பிரிவின் கீழ், 6 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த 6 மாத கால அவகாசம் அவர்கள் மீண்டும் திருமண பந்தத்தை தொடருவதாக முடிவெடுக்கவும் வழிவகுக்கிறது.

ஆனால் கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்பும் நிலையில் இந்த 6 மாத கால காத்திருப்பு இல்லாமல், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 142-ன் கீழ் சிறப்பு அதிகாரத்தை உச்சநீதிமன்றமே உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு ஷில்பா சைலேஷ் – வருண் ஸ்ரீனிவாசன் தம்பதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு (2016) நீதிபதிகள் சிவகீர்த்தி சிங் மற்றும் ஆர் பானுமதி (இருவரும் ஓய்வு பெற்றவர்கள்) ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு பரிந்துரை செய்தது.

குடும்பநல நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிடாமல், விவாகரத்து வழங்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா? இந்து திருமண சட்டத்தின் 13பி-ல் கூறப்பட்டுள்ள கட்டாய காத்திருப்பு காலத்தை உச்ச நீதிமன்றம் புறந்தள்ள முடியுமா? என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு ஆராய்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி ‘இதுபோன்ற சமூக சவால்களுக்கு தீர்வு அளிப்பது சிறிது காலம் எடுக்கும். சில சமயங்களில் சட்டங்களைக் கொண்டுவருவது எளிதாக இருக்கும். ஆனால், அதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்துவது கடினம்’ என்று குறிப்பிட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் நேற்று (மே 1) நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, ஏஎஸ் ஓகா, விக்ரம் நாத் மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்புவார்கள் 6 மாத காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சீர் செய்ய முடியாத திருமணங்களை உடனடியாக ரத்து செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அனுமதி உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் இந்து திருமண சட்டம் 13-பி கீழ் பரிந்துரைக்கப்பட்ட 6 மாத கால கட்டாய காத்திருப்பு இல்லாமல், உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டம் 142-ன் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக விவாகரத்து வழங்க முடியும்.

ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்க உச்சநீதிமன்றம் 142 (1) பிரிவின் கீழான அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்பதில் எந்தவித சந்தேகத்துக்கோ அல்லது விவாதத்துக்கோ இடமில்லை. இது பொதுக் கொள்கை தத்துவங்களின் அடிப்படையை மீறுவதாக அமையாது.

அதேநேரம், விவாகரத்து கோரும் தம்பதி அரசியல் சாசன பிரிவு 142 அதிகாரத்தின் கீழ் உடனடி விவாகரத்து கோரி சட்டப் பிரிவு 32-ன் கீழ் நேரடியாக உச்சநீதிமன்றத்திலோ அல்லது பிரிவு 226-ன் கீழ் உயர்நீதிமன்றத்திலோ மனுத் தாக்கல் செய்வதை அனுமதிக்க முடியாது. குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உரிய தீர்வு கிடைக்காதபோது மட்டுமே, உயர்நீதிமன்றத்தை அல்லது உச்சநீதிமன்றத்தை அணுக அனுமதிக்க முடியும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்குத் தேசிய மகளிர் ஆணையம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேக ஷர்மா, ”பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விரைந்து விவாகரத்து அளிப்பதன் மூலம், பெண்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான திட்டங்களை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படும்” என்றார்.

மோனிஷா

என்சிபி தலைவர் பொறுப்பிலிருந்து சரத்பவார் விலகல்!

தூக்கு தண்டனை: நிபுணர் குழு அமைக்க முடிவு!

mutual consent divorce
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *