’நாடாளுமன்றத்தை திறப்பது யார்?’: உச்ச நீதிமன்ற வழக்கில் நடந்தது என்ன?

Published On:

| By christopher

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (மே 26) மறுப்பு தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் (மே 28) திறந்து வைக்க உள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.

இதற்கிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசுகின் உச்சநீதிமன்றத்தில் நேற்று பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இதனை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய விடுமுறைக் காலஅமர்வு இன்று (மே 26) அவசர வழக்காக விசாரணை மேற்கொண்டது.

அப்போது தனது மனுவுக்காக தானே ஆஜரான வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயசுகின்,

”நிர்வாகத்தின் தலைவர் குடியரசுத் தலைவர். அவர் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதி நரசிம்ஹா, “நீங்கள் ஏன் இதுபோன்ற மனுக்களுடன் வருகிறீர்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை.

பிரிவு 32-ன் கீழ் இதை விசாரிப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை” என்று கூறினார்.

தொடர்ந்து வாதிட்ட மனுதாரர்,  ”இந்திய அரசியலமைப்பு சட்டம் 79வது பிரிவில் நாடாளுமன்றம் என்பது குடியரசுத் தலைவரையும் இரு அவைகளையும் கொண்டது என்று கூறுகிறது.

நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரே நாடாளுமன்றத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர்” என்றார்.

மேலும் குடியரசுத் தலைவரின் சிறப்பு உரையுடன் தான் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று கூறும் பிரிவு 87 ஐயும் மனுதாரர் மேற்கோள் காட்டினார்.

இதற்கும், புதிய கட்டிட திறப்பு விழாவுக்கும் என்ன தொடர்பு என்று நீதிபதிகள் எதிர் கேள்வி எழுப்பினர்.

மேலும் மனுதாரரின் வாதங்களில் திருப்தி அடையாத நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்யும் முடிவுக்கு வந்தனர்.

அப்போது மனு தாரர், ‘தள்ளுபடி செய்துவிட வேண்டாம். நானே வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்’ என்று அனுமதி கோரினார்.

அப்போது எழுந்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”இதே மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதால், மனுதாரர் மனுவை வாபஸ் பெற அனுமதிக்கக் கூடாது” என்றார்.

அதற்கு பதில் அளித்த மனுதாரர், ’உயர் நீதிமன்றத்தை அணுகும் எண்ணம் தனக்கு இல்லை’ என்று உறுதி கூறினார். அதன்படியே மனுவை வாபஸ் பெற்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவில் பாமக பங்கேற்கும்: அன்புமணி

நாடாளுமன்றத்தில் செங்கோல்: காங்கிரஸின் மறுப்பும்… அமித்ஷாவின் பதிலடியும்!

New Parliament Building case
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel