SC judgement in adani groups
அதானி விவகாரத்தில் சிறப்பு குழு விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 3) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ அதானி குழுமம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது, அதானி குழுமத்திற்கு அதிக அளவில் கடன் இருப்பதாகவும், பங்கு மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது, பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது, அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு குறையத் தொடங்கியது. இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்றும் அதானி குழும முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டர்பர்க் அறிக்கை குறித்தும், அதானி குழுமம் ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டதா என்றும் விசாரிக்க இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (செபி) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச் சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இக்குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், அதானி குழும முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தேவையில்லை என்றும் செபியின் விசாரணை மட்டுமே போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ”ஒரு குறிப்பிட்ட அளவே செபியின் அதிகார வரம்புக்குள் உச்சநீதிமன்றம் தலையிட முடியும்.
முறைகேடு விவகாரம் தொடர்பாக செபியின் விசாரணை 3 மாதத்தில் முடிக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கை வேறு எந்த விசாரணை அமைப்புக்கும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
இந்த வழக்கில் சம்பந்தம் இல்லாத 3-வது நபரின்(நிறுவனத்தின்) ஒரு அறிக்கையை ஆதாரமாக எடுத்துகொள்ள முடியாது.
செய்திதாள்கள் மற்றும் புலனாய்வு அறிக்கைகள் ஒரு தகவலாகவே (input) பார்க்க முடியுமே தவிர, அதனை முழு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சிக்கலில் தனுஷ், எஸ்.கே: தமிழ் படங்களை வெளியிட கடும் கட்டுபாடு!
என்ன நல்லவனா காட்டிக்கணும் போகல… பிக்பாஸ் நிக்ஸனின் வைரல் போஸ்ட்!
SC judgement in adani groups