நம் நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து இன்றோடு விடைபெறும் ராம் நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு இன்று (ஜூலை 24) மாலை உரையாற்றினார். அப்போது அவர் சுற்றுச் சூழல் பற்றிய கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
”ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் என் மீது மட்டற்ற நம்பிக்கை வைத்து, உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக என்னை இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தீர்கள். என் பணிக்காலம் முடிவடைந்த பிறகு நான் விடைபெறும் வேளையில் உங்கள் அனைவரோடும் நான் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய சக குடிமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என அனைவருக்கும் என் ஆழமான நன்றிகள். நாடெங்கும் நான் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களின் போது, குடிமக்களுடனான என்னுடைய சந்திப்புகள் எனக்கு உத்வேகத்தையும், சக்தியையும் அளித்தன.
சின்னச் சின்ன கிராமங்களிலிருந்து வரும் விவசாயிகள்-பணியாளர்கள், இளம் மனங்களுக்கு வடிவம் கொடுக்கும் ஆசிரியர்கள், நமது மரபினை வளப்படுத்தும் கலைஞர்கள், நமது நாட்டின் பல்வேறு பரிமாணங்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள், தேசத்தின் பொருட்டு செல்வம் திரட்டும் வணிகர்கள், மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள்-செவிலியர்கள், தேசத்தின் உருவாக்கலில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்-பொறியாளர்கள், நாட்டின் நீதிவழங்கல் முறைக்குப் பங்களிப்பு அளிக்கும் நீதிபதிகள்-வழக்குரைஞர்கள், நிர்வாகத்தைச் சீராக இயக்கும் ஆட்சிப்பணி அதிகாரிகள், வளர்ச்சியோடு அனைத்து சமூகப் பிரிவுகளையும் இணைக்கும் நமது சமூக சேவகர்கள், இந்திய சமூகத்தில் ஆன்மீக ஓட்டத்தை பராமரித்து வரும் சமய பிரச்சாரகர்கள்-அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கைகளின் தலைவர்கள் ஆகிய நீங்கள் அனைவரும், நான் என் கடமைகளை செவ்வனே செய்ய உதவியிருக்கின்றீர்கள். சுருங்கச் சொன்னால், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிடமிருந்தும் முழுமையான ஒத்துழைப்பு, ஆதரவு, ஆசிகள் ஆகியன எனக்குக் கிடைத்தன” என்று கூறியுள்ள ராம்நாத் கோவிந்த்,
“இயற்கை அன்னை ஆழ்துயரில் இருக்கிறாள், நமது பூமியின் எதிர்காலத்தையே கூட பருவநிலை மாற்றங்கள் ஆபத்துக்குள்ளாக்கலாம். நாம் நமது சுற்றுச் சூழலை, நமது நிலத்தை, காற்றை, நீரை, நமது குழந்தைகளுக்காகவாவது பாதுகாக்க வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் நமது மரங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள், பிற உயிரினங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாம் அக்கறை காட்ட வேண்டும். தேசத்தின் முதல் குடிமகன் என்ற முறையில், என் சக குடிமக்களுக்கு ஆலோசனை ஒன்று நான் வழங்க வேண்டுமென்றால் அது இதுவாகவே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார் ராம் நாத் கோவிந்த்.
–வேந்தன்