வளைகுடா நாடுகளின் ராஜாவாக இன்றைக்கும் திகழ்வது சவுதி அரேபியா. அதுமட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமாகிய மெக்காவை தன்னகத்தே கொண்டிருப்பதால் உலக இஸ்லாமிய நாடுகளின் மதிப்புக்கு உரிய நாடாக மத விஷயத்தில் மட்டுமல்ல, பொருளாதார விஷயத்திலும் திகழ்கிறது சவுதி அரேபியா.’
இன்றும் மன்னாராட்சி முறையைக் கொண்டிருக்கும் சவுதி அரேபியாவின் இப்போதைய இளவரசர் முகமது பின் சல்மான். 38 வயதே ஆன சல்மான் சவுதியின் இளவரசர் மட்டுமல்ல அந்நாட்டின் பிரதமரும் கூட. இப்படிப்பட்ட இளைஞரின் நடவடிக்கையைதான் இன்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
சவுதி இளவரசரை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
அக்டோபர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை, சவுதி தலைநகர் ரியாத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கின், சவுதி இளவரசரான முகமது பின் சல்மானை அவரது அரச பண்ணை வீட்டில் சந்தித்து ஒரு மணி நேரம் பேசியிருக்கிறார்.
1,500 க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் அக்டோபர் 7 அன்று காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் தெற்கில் ஊடுருவினர். அதேநேரம் பாலஸ்தீன எல்லையில் இருந்து சுமார் 5,000ராக்கெட்டுகளை ஏவி தாக்கினர். இதற்கு பதிலடியாக கடந்த பத்து நாட்களாக காசா நகர் மீது தடை செய்யப்பட்ட குண்டுகளை எல்லாம் சரமாரியாக ஏவி தாக்கி துவம்சம் செய்து வருகிறது இஸ்ரேல்.
இதில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகிறார்கள்.
தனது அரேபிய சகோதரர்கள் கொல்லப்படுவது ஒருபக்கம் … கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார ரீதியாக உறவுக் கரம் நீட்டும் இஸ்ரேல் மறுபக்கம்… என இருவரில் யார் பக்கம் நிற்பது என்பதுதான் சவுதி இளவரசரின் முன் நிற்கும் சவால்.
ஆனாலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா போன்ற நாடுகள் பகிரங்கமாக நிற்பதைப் போல சவுதி அரேபியா நிற்க முடியாது. அதேநேரம் மன்னராட்சி நடத்தும் நாடான சவுதி ஹமாஸ் போன்ற தன் முனைப்பு தீவிரவாதிகளையும் ஆதரித்துவிட முடியாது.
இப்படிப்பட்ட சூழலில்தான் இஸ்ரேல் -ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் சவுதியின் பங்கு அதிலும் குறிப்பாக இந்த 38 வயது இளவரசரின் பங்கு என்ன என்பதை உலகமே எதிர்பார்த்திருக்கிறது.
இந்த நிலையில்தான் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தனது மத்திய கிழக்கு சுற்றுப் பயணத்தின் முக்கிய சந்திப்பாக அக்டோபர் 14 ஆம் தேதி சவுதி இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானை சந்தித்திருக்கிறார்.
ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு குறித்து தனது ஹோட்டலுக்குத் திரும்பிய ஆண்டனி பிளிங்கன், “மிகவும் பயனுள்ளது,” என்று கூறினார்.
இதேநேரம் இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்துதல், அனைத்து பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் போர் பரவுவதைத் தடுத்தல் ஆகிய அம்சங்கள் குறித்து சவுதி இளவரசருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பேசினார். ஹமாஸ் மீது சவுதி கடுமை காட்ட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருக்கிறது அமெரிக்கா.
மேலும் பொதுமக்களை பாதுகாப்பதற்கும், மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் ஸ்திரத்தன்மையை முன்னேற்றுவதற்கும் அமெரிக்கா, சவுதி ஆகிய இரு நாடுகளும் உறுதியாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.
பாலஸ்தீன மக்களின் நியாயத்துக்கு சவுதி ஆதரவு!
இதேபோல சவுதி பிரஸ் ஏஜென்சி வெளியிட்ட அதிகாரபூர்வ செய்தியில்,
“இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத், இன்று ரியாத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்தார். அவருடன் காசா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தற்போதைய இராணுவ விரிவாக்கம் குறித்து விவாதித்தார்.
அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை பட்டத்து இளவரசர் மீண்டும் உறுதிப்படுத்தினார். தகவல்தொடர்புகளை அதிகரிக்கவும், நிலைமையை அமைதிப்படுத்தவும், தற்போதைய தீவிரத்தை நிறுத்தவும், சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு மதிப்பளிக்கவும் சவுதியின் முயற்சியை வலியுறுத்தினார்.
காசா மீதான முற்றுகையை நீக்கவும், நீதி, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை நிலைநாட்டவும், பாலஸ்தீன மக்கள் தங்களின் நியாயமான உரிமைகளை அடைவதை உறுதி செய்யவும் சவுதி அழைப்பு விடுக்கிறது என்று இளவரசர் மேலும் கூறினார்.
குடிமக்களை குறிவைப்பது, உள்கட்டமைப்பை அழிப்பது மற்றும் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய சேவைகளை சவுதி எப்போதும் நிராகரிக்கிறது என்று இளவரசர் கூறினார்” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் எகிப்து வழியாக இஸ்ரேல் செல்கிறார்.
வளைகுடா உள்ளிட்ட உலகம் தன்னை உற்றுநோக்குவதை அறிந்துகொண்ட சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இஸ்ரேல்-ஹமாஸ் விவகாரத்தில் மிக கவனமாக காய் நகர்த்துகிறார் என்கிறார்கள் வளைகுடா அரசியலை கவனிப்பவர்கள்.
இஸ்ரேல் -சவுதி… உறவா பகையா?
இஸ்ரேல்-சவுதி இடையே என்ன நடந்துகொண்டிருக்கிறது? இதற்கு இளவரசர் முகமது பின் சல்மான் எப்படி காரணமானார்?
சவுதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உறவு என்ற ஒன்று இருந்ததே இல்லை. 1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை பிளந்து இஸ்ரேல் நாட்டை ஐநா மூலமாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உருவாக்கியபோது, அந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது சவுதி அரேபியா.
பாலஸ்தீனம், இஸ்லாம், அரபு தேசத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில் மட்டுமே சவுதி அரேபியாவின் இஸ்ரேல் மீதான பார்வை இருந்தது. ஆனால் இந்த பார்வையை சவுதி அரேபியாவின் தாராளமய பொருளாதார மயம் திசை திருப்பியது.
திசை திரும்பியதா சவுதி?
இஸ்ரேலில் இருந்து எந்த பொருளையும் எந்த சேவையையும் பெறுவதில்லை என்று உறுதியான கொள்கை முடிவில் இருந்த சவுதி அரேபியா 2005 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீதான தடையை நீக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.
காரணம், WTO (WORLD TRADE ORGANAISATION). அங்கே செய்துகொண்ட ஒப்பந்தப்படி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் வணிக உறவு வைத்துக்கொள்ள மாட்டேன் என்று மறுக்க முடியாது.
ஆக பாலஸ்தீனர்கள், இஸ்லாமியர்கள், அரபு என்ற அடிப்படையிலே தனது கொள்கையை கட்டமைத்திருந்த சவுதி அரேபியா பொருளாதார நலன்களின் அடிப்படையில் அதிலிருந்து மெல்ல மெல்ல திரும்பியது.
தற்போதைய இளவரசர் முகமது பின் சல்மானின் இளமைக் காலங்களில்தான் இந்த மாற்றங்கள் நடைபெறத் தொடங்கின. முகமது பின் சல்மான் கிங் சவுதி பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பயின்று அதற்குப் பிறகு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்ய தொடங்கினார். ராஜ குடும்பத்து மரியாதைகளுக்கு மயங்காமல் பல்வேறு ஆண்டுகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார் முகமது பின் சல்மான்.
அதற்குப் பிறகு அவர் சவுதி அமைச்சரவையில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அவருடைய 24 வது வயதில் அதாவது 2009 இல் அவருடைய தந்தைக்கு அதிகாரப்பூர்வ சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இப்படி பல நிலைகளைக் கடந்து 2022 இல் அவர் சவுதி இளவரசர் என்பதோடு பிரதமராகவும் மன்னரால் நியமிக்கப்பட்டார்.
இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிரானவரா சவுதி இளவரசர்?
முகமது பின் சல்மானின் சித்தாந்தம் தேசியவாதம் மற்றும் ஜனரஞ்சகமானது என கருதப்படுகிறது. முகமது பின் சல்மானுக்கு விவரம் தெரிந்த வயதில் சவுதி அரேபியா பொருளதார அடிப்படையில் இஸ்லாம் என்ற எல்லையைத் தாண்டி உலகோடு கை குலுக்கத் தொடங்கிய நிலையில்… ஏற்கனவே சவுதி ஆட்சியாளர்களிடம் இருந்த அந்த பாணி முகமது பின் சல்மான் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அரபு தேசியவாத சித்தாந்தத்தை வென்றெடுப்பது அதே நேரம் வளைகுடாவின் மற்ற நாடுகளில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களை எதிர்ப்பதில் கவனம் செலுத்துவது என இரண்டு வகை நடவடிக்கைகளுக்கு உரியவராக பார்க்கப்படுகிறார் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான். அவரது ஏமன் நடவடிக்கைகள் இதற்கு உதாரணமாக காட்டப்படுகின்றன.
2014 இலேயே எழுந்த சந்தேகம்!
2014 கால கட்டத்தில் அரசியல் ரீதியாகவும் அரசாங்க ரீதியாகவும் வேகமாக வளர்ந்து வந்தார் முகமது பின் சல்மான்.
2014 இஸ்ரேல்-காசா மோதலின் போது, மிடில் ஈஸ்ட்-ஐ என்ற பத்திரிகையின் ஆசிரியர் டேவிட் ஹியர்ஸ்ட், “இஸ்ரேல் -ஹமாஸ் மோதலில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு சவுதி அரேபியா ஆதரவளிக்கிறது. மொசாட் மற்றும் சவுதி உளவுத்துறை அமைப்புகளின் அதிகாரிகள் தொடர்ந்து சந்தித்து வந்திருக்கிறார்கள்” என்று எழுதினார். ஆனால் அதை சவுதி அரசாங்கம் மறுத்தது. இருப்பினும் இஸ்ரேலுடனான தொடர்பு பற்றி அப்போது சவுதி மறுக்கவில்லை.
இந்த பின்னணியில்தான் இப்போதைய இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் பற்றி சவுதி அரேபியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் என உலகம் முழுமையும் உற்று நோக்கியது.
ஈரானுக்கும் சவுதிக்கும் இடையே அணு ஆயுதம் உள்ளிட்ட பல முரண்பாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி சவுதி மத்திய கிழக்கின் முக்கியமான பெரு அதிகாரம் என்பதால்தான்… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அமெரிக்காவை முந்திக் கொண்டு சவுதி இளவரசரோடு போனில் பேசி இதில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கு சில நாட்கள் கழித்துதான் இப்போது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சவுதி இளவரசரை சந்தித்து ஹமாஸ் பயங்கரவாதத்தைக் கண்டிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்.
இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான வணிகம், தொழில் நுட்பம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறை உறவுகளை வளர்ப்பதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது. அதனால்தான் இப்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அவசரமாக சவுதி சென்று இளவரசரை சந்திக்கிறார். அவரை சந்தித்துவிட்டு இஸ்ரேல் நோக்கி செல்கிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்.
இஸ்ரேல்-சவுதி இடையே விளையாடும் ஹமாஸ்?
எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க தொலைக்காட்சியான Fox News க்கு பேட்டியளித்த சவுதிஅரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், “இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தனது நாடு நெருங்கி வருகிறது. ஈரான் அணு ஆயுதத்தைப் பெற்றிருப்பது எங்களுக்கு கவலை அளிக்கிறது. அவர்கள் ஒன்றைப் பெற்றால், நாங்கள் ஒன்றைப் பெற வேண்டும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மத்திய கிழக்கின் அதிகார சமநிலைக்காகவும் இது தேவைப்படலாம். அப்படி ஒரூ சூழலை நாங்கள் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
சவுதிக்கும்- இஸ்ரேலுக்குமான உறவுகள் ஒப்பந்தங்கள் வலிமைப்பட்டு வருவதாக சவுதி இளவரசரே கூறிய நிலையில் அதில் ஒரு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஹமாஸ் மூலம் இஸ்ரேல் மீது சமீபத்திய தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒரு விவாதம் மத்திய கிழக்கு அரசியலில் நடக்கிறது.
அரபு தேசமான பாலஸ்தீனத்தை சவுதி அரேபியா தனது பெருங்கரத்தைக் கொண்டு காக்குமா? அல்லது மத்திய கிழக்கு நலன்களைத் தாண்டிய உலகப் பொருளாதார பார்வையில் பாலஸ்தீனத்தை இஸ்ரேலிடம் பலி கொடுக்குமா?
எம்.பி.எஸ். என அழைக்கப்படும் முகமது பின் சல்மான் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விக்கு மத்திய கிழக்கு முதல் மேற்கத்திய உலகம் வரை பதில் அறியக் காத்திருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
லியோ சிறப்புக்காட்சி வழக்கு ஒத்திவைப்பு!
மிக கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில்?