இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு சென்ற 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இஸ்லாம் மதத்தின் ஐந்து முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாக ஹஜ் கருதப்படுகிறது. ஒவ்வொரு முஸ்லீமும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வது கட்டாயமாகும்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
சவுதி அரேபியாவில் நிலவும் கடுமையான வெப்பம், கூட்ட நெரிசல், வயதானவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு போன்ற காரணங்களால் 1,301 ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக சவுதி அரேபியா தூதர் கூறியதாக AFP ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை நடந்தபோது வெப்ப அலை வீசியுள்ளது. குறிப்பாக பல பகுதிகளிலும் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் முறையான அனுமதி பெறாமல் ஹஜ் பயணம் மேற்கொண்டதாகவும், நேரடி சூரிய ஒளியின் கீழ் நடந்ததாகவும் சவூதி அரேபியா செய்தி நிறுவன ஊடகமான SPA தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஃபஹத் அல் ஜலாஜெல் கூறும்போது, “வெப்ப அலையின் ஆபத்துகளில் இருந்து யாத்ரீகர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ள முடியும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அனுமதி இல்லாமல் மெக்காவுக்கு வந்த 1,40,000 யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவார். அவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீனவர்கள் கைது: இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!
பியூட்டி டிப்ஸ்: தொப்பையை மட்டும் குறைக்க முடியுமா? இதோ வழி!