இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதிக்கான பதவிக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்தியாவின் 50வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. நடைமுறைபடி பதவிக்காலம் முடிவடைய இருக்கும் தலைமை நீதிபதி, அடுத்து அந்த பதவியில் அமரவிருக்கும் நீதிபதிக்கான பெயரை மத்திய சட்ட அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.
அதன்படி, தலைமை நீதிபதி சந்திரசூட், 51வது இந்தியத் தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை சட்ட அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
நீதிபதி சஞ்சீவ் கண்ணா 1960 ஆம் வருடம் மே மாதம் 14ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் டெல்லி பார் கவுன்சிலில் வக்கீலாக 1983 ஆம் வருடம் சேர்ந்தார்.
இவர் அரசியலமைப்புச் சட்டம், நேரடி வரிவிதிப்பு, நடுவர் மன்றம், வணிகச் சட்டம், நிறுவனச் சட்டம், நிலச் சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற துறைகளில் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். இவர் 2025 ஆம் ஆண்டு மே 13 அன்று ஓய்வு பெறவுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது சரி என்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வில் நீதிபதி சஞ்சீவ் கண்ணாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
Bigg Boss : யானையை அடக்கனும்னா 10 பேர் வேணும்! – எவிக்சன் குறித்து ரவீந்தர் ரவுசு!
கைவிடப்பட்ட பங்கருக்குள் கிடந்த படுக்கை, ஏ.கே.47 … இஸ்ரேல் ராணுவம் நடத்தியஅதிரடி!