மெட்டா நிறுவனத்தின் இந்தியா கிளையின் தலைவராகச் சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக ஏற்கெனவே அஜித் மோகன் பதவி வகித்தார்.
இவர் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி மெட்டா நிறுவனத்தில் இருந்து வெளியேற இருப்பதாக ராஜினாமா கடிதத்தையும் வழங்கியிருந்தார்.
அஜித் மோகன் வெளியேறிய பிறகு ஃபேஸ்புக் இந்தியா பார்ட்னர்ஷிப் பிரிவின் இயக்குநர் மற்றும் தலைவரான மணீஷ் சோப்ரா, தற்போது இடைக்கால தலைவர் அடிப்படையில் வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
”இந்தியாவுக்கான புதிய தலைவராக சந்தியாவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என மெட்டாவின் தலைமை வணிக அதிகாரி மார்னே லெவின் தெரிவித்துள்ளார்.

”தற்போது சந்தியா, வணிகம் மற்றும் வருவாயைப் பெருக்குவதற்கான பணிகளில் கவனம் செலுத்துவார் என்றும்,
2023ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று புதிய பதவிக்கு மாறுவார்” என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மெட்டாவில் இணைந்த சந்தியா தேவநாதன், சிங்கப்பூர் மற்றும் வியாட்நாம் நாடுகளின் மெட்டா நிறுவனத்தின் வணிக பிரிவுகளைக் கவனித்துக் கொண்டார்.
தென்கிழக்கு ஆசியாவில் மெட்டாவின் இ-காமர்ஸ் முயற்சிகளையும் உருவாக்க உதவினார்.
முன்னதாக, சந்தியா தேவநாதன் சிட்டி வங்கியில் 10 வருடம், ஸ்டேண்டர்டு சார்டெர்டு வங்கியில் 6 வருடம், ஃபேஸ்புக்கில் 2016ல் சேர்ந்து பல பதவிகளில் பணியாற்றி, கடைசியாக ஆசியா பசிபிக் (APAC) சந்தையின் கேமிங் பிரிவை வழிநடத்தி வந்த நிலையில் தற்போது மெட்டா இந்தியாவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அஜித் மோகனுக்கு முன்னதாக, வாட்ஸ்அப்பின் இந்தியத் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் இந்தியாவில் உள்ள மெட்டா பிளாட்பார்ம்ஸ் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் தங்கள் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்தனர்.
தற்போது, வாட்ஸ்அப்பின் இந்தியப் பிரிவு ‘பொதுக் கொள்கை இயக்குநராக’ பணியாற்றி வரும் சிவநாத் துக்ரா,
இனிமேல் மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களின் ‘பொதுக் கொள்கை இயக்குனர்’ ஆக செயல்படுவார் என மெட்டா நிறுவனம் அறிவித்ததுள்ளது.
மேலும், மெட்டா நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அஜித் மோகன் தற்போது, மெட்டா நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஸ்னேப் நிறுவனத்தில் ஆசிய பிரிவின் தலைவராகச் சேர்ந்துள்ளது மெட்டா நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
மொபைல் ஆலோசனை மையம் : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து!